மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்

258 0

காவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுப்பை தலுகலை தோட்டத்தில் 67 வயதுடைய வயோதிபப் பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் 9ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவுப்பை தலுகலை தோட்டத்தைச் சேர்ந்த பனாவென்னவில் வசித்து வந்த யக்தேஹிகே சுமானாவதி (வயது 67) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பெண் தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாகவும் சம்பவ தினத்தன்று அந்த பெண் வேலைக்கு தாமதமாக சென்றதால் அன்றைய தினம் அவர் வேலைக்கு அனுமதிக்கப்படாத காரணத்தால் அவர் மீண்டும் தமது வீட்டுக்கு வந்ததாகவும் அவரது மகன் நந்தன புஸ்பகுமார (வயது 31) பொலிஸாரிடம் தெரிவித்தார்.

சம்பவ தினத்தன்று மாலை ஒருவர் தமது வீட்டுக்கு வந்து சுமானாவதியை சந்திக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றதாகவும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மருமகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு அதன் பிறகு தமது வீட்டுக்கு தன்னை சந்திக்க வந்த நபரை சந்தித்துவிட்டு வருவதாக கூறி வீட்டிலிருந்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அன்றைய தினம் இரவு 7.20 மணியளவில் யாரோ தன்னை கொலை செய்ய முயல்வதாக குறித்த பெண்ணின் மரண ஓலம் வீட்டிலிருந்து கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டதாக அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

மேற்படி சம்பவம் குறித்து காவத்தை மற்றும் இரத்தினபுரி பொலிஸார் பொலிஸ் நாயுடன் சம்பந்தப்பட்ட பிரதேசத்தை சுற்றி வலைவிரித்ததையடுத்து, தலைமறைவாகி இருந்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.