தமிழர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவிடம் இல்லையென்பது தெளிவாக தெரிகிறது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் ஊரெழுச்சி வேலைத்திட்டத்திற்கமைய அமைக்கப்பட்ட பூநகரி வாடியடி சந்தைக்கான கட்டிடத்தொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் ஐயம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உபதவிசாளர் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், சந்தை வர்த்தகர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்ட அந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி ஏற்ற நாளிலிருந்து நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டும் தெரிவு செய்யப்பட்டேன் என்கின்ற மமதையில் கோத்தபாய ராஜபக்ஷ கூறி வருகின்றார்.
இதுவரை வடக்கு மாகாணத்திற்கு ஆளுநரைக் கூட தெரிவு செய்ய மனம் இல்லாதவர் தமிழர்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பாரா? இந்திய விஜயத்தின் போது இந்தியாவால் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் விடயங்களை இந்தியாவில் வைத்தே நடைமுறை படுத்த முடியாது என கூறுபவர் எமக்கு அதிகாரங்களை தருவாரா என்பது சந்தேகமே.
எமது மக்களின் கொலைகளுக்கு காரணமான ஒரு போர்க்குற்றவாளியாக இருப்பவர் எம்மை இன்னும் அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கிற்கு அவர் வரவில்லை. எமக்கான உரிமைகள் கிடைக்கப் பெற்றால் எமது அபிவிருத்திப் பணிகளை நாம் சுயமாகவே மேற்கொள்வோம் என்றார்.

