இந்திய கலாசார உறவுகளுக்கான இந்தியப் பேரவையின் புலமைப் பரிசில் திட்டத்தின்கீழ் இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்ட கற்கை நெறிகளை இந்தியாவில் மேற்கொள்வதற்கு 2020–2021 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இதன்படி நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இளமாணிக் கற்கைகளான பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல் மனிதப் பண்பியல் மற்றும் கலைகள் உள்ளிட்ட பாடங்களுக்கும் மௌலானா ஆசாத் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் முதுமாணிக் கற்கைக்காக பொறியியல், விஞ்ஞானம், வர்த்தகம், பொருளியல், மனிதப்பண்பியல் மற்றும் கலைகள் உள்ளிட்ட பாடங்களுக்கு பொறியியல், விஞ்ஞானம் மற்றும் விவசாய கற்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தகவல் தொழில் நுட்பத்துறையில் பொறியியல் இளமாணி மற்றும் தொழில்நுட்ப இளமாணி கற்கைகளுக்கும் (மருத்துவம், இணை மருத்துவ கற்கைகள், நவ நாகரீக அழகியற் கலை கற்கைகள் மேற்படி புலமைப் பரிசில்களில் உள்ளடங்காது) பொது நலவாய புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மருத்துவம், மருத்துவம் தொடர்பான கற்கைகள், அழகியற் கலை கற்கைகள் தவிர்த்து ஏனைய பாடங்களில் கலாநிதிப் பட்ட ஆய்வுக்கும் என புலமைப்பரிசில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்புலமைப் பரிசில்களுக்கான தெரிவு திறமையின் அடிப்படையில் அமைந்திருக்கும். மேலும் இந்தியாவின் உயர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க தெரிவு செய்யப்படுவோர் இலங்கை அரசின் உயர்கல்வி அமைச்சின் ஆலோசனைகளின்படி தெரிவு செய்யப்படுவர்.
அனைத்து புலமைப்பரிசில்களுக்குமான முழுமையான கல்விக்கட்டணம் மாதாந்த செலவுகளில் உள்ளடக்கப்படும். மேலும் தங்குமிட கொடுப்பனவு, புத்தகம் காகிதா செலவுகள் வருடாந்த கொடுப்பனவுடன் வழங்கப்படும். மேலும் முழுமையான
சுகாதார வசதிகள், இந்தியாவில் மிகக் கிட்டிய விமான நிலையத்திற்கான விமானப் பயணச்சீட்டு கட்டணம், கல்விச் சுற்றுலா என்பனவற்றுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.
விண்ணப்பப்படிவங்களை உயர்கல்வி அமைச்சின் www.mohe.gov.lk என்ற இணையத்தள முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். மேற்படி விண்ணப்பத்திற்கான முடிவுத் திகதி இம்மாதம் 16 ஆம் திகதி வரையில்.
தகைமையுடைய மாணவர்கள் தாமதமின்றி விண்ணப்பிக்குமாறு வேண்டப்படுவதுடன் மேலதிக விபரங்கள் தேவைப்படின் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு பொன். இராஜநாதன் அவர்கள் (இந்து கலாசார நிலைய கல்வி, உபகுழு, 348, பேராதனை வீதி, கண்டி, – தொலைபேசி இல. 0772402618) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

