குப்பைகளையும் கழிவுப் பொருட்களையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தவில்லை – மஹிந்த

238 0

குப்பைகளையும், கழிவுப் பொருட்களையும் அகற்றும் பணியில் ஈடுபடுமாறு ஒருபோதும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த அவர் சமய நிகழ்வுகளின் பின்னர் செய்தியாளர்களின் மத்தியில் பேசிய போதே இந்த கருத்தை வெளியிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “நாளாந்தம் வெளியேற்றப்படும் குப்பைகளையும், தேவையற்ற பொருட்களையும் சுத்திகரிப்பது சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸாரின் முக்கிய காரியமல்ல. அவற்றை சுத்தம் செய்திருக்கிறார்களா என்று கண்காணிப்பதே அவர்களின் தலையாய கடமையாகும்.

முறையான சுத்திகரிப்பை மேற்கொள்ளாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், அவற்றை அறிவுறுத்துவதும்தான் பொலிஸாரின் பணியாகும்.

நகர சபை, பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பாக இருப்பது பிரதேசத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதுதான்.

அந்த பணிகள் முறையாக இடம்பெறுகின்றனவா என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து பார்ப்பது சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பாகும்.

அத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான தீர்க்கமான உடன்பாட்டுக்கு வருவது குறித்து சீன அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அலுவலகத்தின் சி.சி.ரி.வி. கமெரா காட்சிகளை ஆராய்ந்த பின்னர், பல முக்கியமான தகவல்களை வெளிப்படுத்த முடியும்.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சி மற்றும் சின்னத்தைப் பற்றி விவாதித்து வருகின்றோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.