முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து சட்டவிரோத விளம்பர பலகைகள் மற்றும் கட்அவுட்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அகற்றப்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெனரல் நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி உள்ளூராட்சி மன்றங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகள் மற்றும் கட்அவுட்களை அகற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடு முழுவதும் உள்ள சுற்லாத் தளங்கள், பிரபல்யமான பகுதிகள் மற்றும் கடற்கரையோரங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடற்கரை பகுதிகளில் குப்பை கொட்டுவது தடைசெய்யப்பட்டுள்ள அதேவேளை கடற்கரைகளில் குப்பைகளை அகற்றுவதற்கான வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
சூழல் பாதுகாப்பு மற்றும் சூழல் அலங்காரத்தை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டு வரும் நோக்குடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு விஷேட ஆலோசனைகளுக்கு அமையவே மேற்படி நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

