அமைச்சரவை நியமிப்பதில் ஜனாதிபதி , பிரதமருக்கு சவால்!

674 0

இடைக்கால அமைச்சரவையில் உங்களுக்கு ஆதரவளித்த பலரும் அமைச்சுப்பதவியை எதிர்பார்க்கின்றார்கள்.

அதனால் 10 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிப்பதற்கு திட்டமிட்டிருந்த போதிலும், தற்போது அது 15 ஆக அதிகரித்திருக்கின்றது.

எனவே புதிய அமைச்சரவையை நியமிப்பதில் ஜனாதிபதியும், பிரதமருக்கு முகங்கொடுத்துள்ள கடினத்தன்மை தொடர்பில் நன்கு சிந்தித்து இடைக்கால அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்குத் தீர்மானித்திருக்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மூன்றுமாத காலத்திற்கான இடைக்கால அரசாங்கத்தின் 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது. இந்த இடைக்கால அரசாங்கத்தில் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டு ஆளுந்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் விருப்பின்படி பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்படவில்லை எனின், உங்களால் எதிர்வரும் 2020 ஆம் ஆண்ட மார்ச் முதலாம் திகதியின் பின்னரே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

எனின் தற்போது பதவியேற்றுக் கொண்டுள்ள பிரதமரின் அரசாங்கம் இன்னமும் 100 நாட்களுக்கு மாத்திரமே நீடிக்கும்.

உங்களுக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் 100 நாட்கள் இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் 38 பேர் உள்ளனர்.

அதேபோன்று முன்னாள் அமைச்சர்களன்றி, மாவட்ட அமைப்பாளர்கள் பலரும் அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கின்றார்கள். 10 பேர் அடங்கிய அமைச்சரவை ஒன்றை நியமிக்க வேண்டுமென்றே நீங்கள் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தீர்கள். எனினும் தற்போது அது 15 ஆக உயர்ந்திருப்பதுடன், அதனை சமாளிப்பது மிகவும் கடினமானது என்பதை நானறிவேன்.

புதிய அமைச்சரவையை நியமிப்பதில் நீங்களும், பிரதமருக்கு முகங்கொடுத்துள்ள கடினத்தன்மை தொடர்பில் நன்கு சிந்தித்து இடைக்கால அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்குத் தீர்மானித்திருக்கிறேன்.

எனது இந்தத் தீர்மானம் நீங்கள் முகங்கொடுத்துள்ள சவாலை சற்றேனும் குறைக்கும் என்று கருதுகின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.