யாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்

290 0

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத நடுப்பகுதி வரை 1557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப் பட்டுள்ளதோடு இருவர் உயிரிழந்ததாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.

யாழ்.குடாநாட்டில் பெய்த அடை மழை காரணமாக டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த வருடம் இதுவரை யாழ். மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 854 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டதுடன் கடந்த ஒக்டோபர் மாதம் 537 பேரும் இம்மாதம் நடுப்பகுதிவரை 1020 பேர் இனம் காணப்பட்டனர்.

 

டெங்கு நோய் தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்டத்திலுள்ள பிரதேச சுகாதார பணிமனைகளுக்கும் டெங்கு நோய் முன்னெச்சரிக்கை தொடர்பில் சகல அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் டெங்கு நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதுடன் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.