இராணுவத்தினர் வடக்கில்தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுத்துவதை தவிர்க்க

313 0

army-1பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பிற்குப் பின்னர் பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பினர்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுத்துவதை தவிர்க்குமாறும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கீரிமலைப் பகுதியில் நேற்று(31) இடம்பெற்ற வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து காணிகள் அற்ற நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த குடும்பங்களுக்காக வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை அமைச்சரிடம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும், அதன் பின்னர் யாழில் நிலவும் அசாதாரண நிலமைகள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் தற்காலிகமாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

நடைபெற்றுவரும் விசாரணையில் பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தமை தொடர்பில் யார் மேல் தவறு உள்ளதென்பது தெரியவரும். இது தொடர்பாக யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியது போல் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி சுயாதீனமாக இடம்பெறும். எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.