தமிழரசு கட்சி சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றார்கள்.
ஆனால் அவர்களுடைய 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவுமில்லை. எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.
அக்கோரிக்கைகளை எல்லோரிடமும் கையளித்த போதிலும், அதற்கு முறையான பிரதிபலிப்பு காட்டப்படாமையால் அம்முயற்சியைக் கைவிட்டுள்ளதாக சுமந்திரன் கூறினார்.
எனவே சஜித் பிரேமதாஸ யாருடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்படாத ஒரு சுதந்திர வேட்பாளராவார் என்று பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்தார்.
‘சஜித்தின் சமுதாயப்புரட்சி’ என்ற தலைப்பில் கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் சமுதாயப்புரட்சியில் உள்ளடக்கப்படும் விடயங்கள் தொடர்பான கையேடு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதனை இவ்வார இறுதியில் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றயீட்டிய பின்னர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் பாரியதொரு சமூக மறுசீரமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
போதைப்பொருள், இலஞ்சம் ஊழல் மற்றும் மத அடிப்படைவாதம் ஆகிய மூன்று விடயங்களுக்கு எதிராகவும் பாரிய யுத்தமொன்றை அவர் முன்னெடுக்கவிருக்கின்றார். அதேபோன்று நாட்டின் பொருளாதார கொள்கைகள் மற்றும் உபாயங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கடந்த 2010 – 2014 வரையான காலப்பகுதியில் நாடு பாரிய கடன்பொறிக்குள் சிக்கிக்கொண்டது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வருமானம் 23 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட அதேவேளை, வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன் தொகை 18 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.
அக்கடன் தொகையில் பெருமளவான தொகையை நாம் இவ்வருடத்திலேயே மீளச்செலுத்தினோம். இந்நிலையில் நாம் அறிவை மையப்படுத்திய பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம்.
அதேபோன்று அரசியலிலும் குறிப்பிடத்தக்க மறுசீரமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டியுள்ளது. எமது நாட்டுமக்கள் 1931 ஆம் ஆண்டிலிருந்து சர்வசன வாக்குரிமையை அனுபவிக்கின்றனர்.
அதனைப் பயன்படுத்தி கடந்த காலங்களில் பல்வேறு அரசாங்கங்களை உருவாக்கியிருக்கின்ற அதேவேளை, மேலும் பல அரசுகளைக் கவிழ்த்திருக்கின்றனர். அதனூடாக புதிய யுகமொன்றை உருவாக்கும் வாய்ப்புக்களும் ஏற்பட்டிருக்கின்றன.
அவ்வடிப்படையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் சஜித் பிரேமதாஸ நாட்டில் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய யுகமொன்றைக் கட்டியெழுப்புவார். அரசியலுள்ள இலஞ்சம், ஊழல் போன்ற புற்றுநோயை ஒழித்து, சீரானதொரு அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிப்பார்.
மேலும் தற்போது இலங்கையில் மாத்திரமன்றி உலகலவில் சூழல் வெப்பமடைதல் பாரிய பிரச்சினையாக மாறியிருக்கின்றது. இத்தகைய சுற்றாடல் பிரச்சினைகளின் காரணமாக இந்தோனேசியா அதன் தலைநகரை மாற்றவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
எனவே இத்தகைய சுற்றாடல் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கான கொள்கைத் திட்டங்களும் சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
கேள்வி : மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை தவிர்க்குமாறும், அதற்கு எதிராகவும் சட்டத்தரணிகள் சங்கம் கருத்து வெளியிட்டுள்ளதே?
பதில் : இன்னமும் மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை கைச்சாத்தாகவில்லை. இது ஒரு ஜனநாயக நாடு. எமது அரசாங்கமும் ஜனநாயகத்தன்மை வாய்ந்தது. தற்போது மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையின் விபரங்கள் அனைத்தும் இணையத்தில் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன. எனவே மக்களும் அதன் உள்ளடக்கம் தொடர்பில் அறியமுடியும். அதேபோன்று பாராளுமன்றத்திலும் இவ்வுடன்படிக்கை குறித்த விவாதம் மேற்கொள்ளப்படும் போது ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் குறிப்பிட முடியும். ஆனால் பொய்யான பிரசாரங்களைக் கேட்டு மக்கள் ஏமாறக்கூடாது.
மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையின் மூலம் எவ்வித யுத்த மற்றும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்றும், சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை மேற்கொள்ள முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்வி : எனினும் மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கையெழுத்திடக்கூடாது என வலியுறுத்தி சுதந்திர சதுக்கத்தில் தேரர் ஒருவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கின்றார். இதுபற்றி?
பதில் : ஒரு ஜனநாயக நாட்டின் உண்ணாவிரதம் இருத்தல், போராட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவை ஜனநாயக உரிமையாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் சொற்ப நாட்களே இருக்கின்றன. அதற்குள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது சாத்தியமற்றதாகும். அனைத்து தரப்பினரும் ஆதரிக்கும் பட்சத்தில் இன்று கூட கையெழுத்திடலாம். ஆனால் இவ்வொப்பந்தம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதால், மக்கள் அதுபற்றி தெளிவடைய வேண்டும்.
ஆனால் மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கவில்லை. அதனை எதிர்க்கும் விமல் வீரவன்ச அக்கட்சியின் தலைவரல்ல. எனவே திரைமறைவில் விரைந்து இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டும் என்ற எவ்வித தேவைப்பாடும் எமக்கில்லை. நாம் அனைத்தையும் ஜனநாயக முறையின் பிரகாரம் வெளிப்படையாகவே செய்கின்றோம்.
கேள்வி : புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறீர்கள்?
பதில் : கடந்த 2015 ஆம் ஆண்டில் நாம் ஆட்சியைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது அரசியலமைப்பில் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்ததுடன், மேலும் பல முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தினோம். அதற்கு அனைத்துக் கட்சிகளினதும் அனுமதியும், ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
அதேபோன்று புதிய அரசியலமைப்பை உருவாக்குவதெனின் அதனை நாம் மாத்திரம் தனித்துச் செய்யப்போவதில்லை. அதற்கும் அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு பெறப்படும். எதிர்வரும் மார்ச் மாதம் உருவாகின்ற புதிய பாராளுமன்றத்தில் முற்றாக நிறைவேற்றதிகாரத்தை ஒழித்தல், அதிகாரங்களை பரவலாக்கம் செய்தல், தேர்தல் முறையில் மாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான வாய்ப்புள்ளது.
கேள்வி : தற்போது நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாகக் கூறுகின்றீர்கள். ஆனாலும் கூறும் விடயங்களை செயற்படுத்துவதில் தாமதம் உள்ளதே?
பதில் : அதற்காகவே இம்முறை அமைச்சுக்களின் ஊடாக முன்னெக்கப்படும் நவீன திட்டங்களின் அமுலாக்கம் தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கான விசேட பிரிவொன்றை உருவாக்கும் திட்டத்தை சஜித் பிரேமதாஸ முன்வைத்திருக்கின்றார். அதனூடாக சுயாதீனமான முறையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்பார்வை செய்யப்படும்.
கேள்வி : தற்போது தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கிறது. அதன் 13 அம்சக் கோரிக்கைளை ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே அவர்கள் ஆதரவு வழங்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகின்றதே?
பதில் : தமிழரசு கட்சி சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவுமில்லை. எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.
அக்கோரிக்கைகளை எல்லோரிடமும் கையளித்த போதிலும், அதற்கு முறையான பிரதிபலிப்பு காட்டப்படாமையால் அம்முயற்சியைக் கைவிட்டுள்ளதாக சுமந்திரன் கூறினார்.
எனவே புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாஸ ஒரு சுயாதீனமான வேட்பாளராவார். எனது கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் அவருக்கு எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. அவர் யாருடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்படாத ஒரு சுதந்திர வேட்பாளராவார்.

