மைத்திரிக்கு சந்திரிகா அனுப்பியுள்ள கடிதம் ! விபரம் இதோ !

281 0

மிகவும் தான்­தோன்­றித்­த­ன­மான முறையில்  கட்­சியின் யாப்­பையும் விதி­முறை­க­ளையும் மீறி  பொது­ஜன பெர­மு­ன­வுடன் சுதந்திரக் கட்சி கூட்­டணி அமைத்­துக்­கொண்­டுள்­ள­துடன் அதன் வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவும் வழங்கியுள்ளது என்று முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.

சுதந்­திரக் கட்­சியை காப்­பாற்­றவே நான் இவ்­வா­றான நட­வ­டிக்­கையை எடுத்­துள்ளேன் என்றும் சந்­தி­ரிகா குறிப்­பிட்­டுள்ளார்.

அவ்­வாறு அனுப்­பப்­பட்­டுள்ள கடி­தத்தில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் நான் எடுத்­துள்ள நிலைப்­பாடு மற்றும் தீர்­மானம்  தொடர்பில் உங்­களை தெளி­வு­ப­டுத்­த­வேண்டும்.

சுதந்­திரக் கட்சி பொது­ஜன பெர­மு­னவின்  வேட்­பாளர்  கோத்­தாபய ராஜ­ப­க்ஷ­வுக்கு  ஆத­ர­வ­ளிப்­ப­துடன்  அக்­கட்­சி­யுடன் கூட்­டணி அமைத்­துள்­ள­தாக ஊட­கங்கள் வாயி­லாக  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எமது கட்­சியின் யாப்­புக்கு அமைய இந்த தீர்­மானம் தொடர்பில் மத்­திய குழுவின் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை என்­ப­தனை நான் அறிவேன். 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதத்­தி­லி­ருந்து எனக்கு  மத்­திய குழுக் கூட்­டத்­துக்கு அழைப்பு விடுக்­க­வில்லை.

2019 ஆம் ஆண்டு மே மாதம் அளவில் நான் வெளிநாட்டில் இருக்­கும்­போது ஒரு கூட்­டத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. நான் வெளிநாட்டில் இருப்­பது தெரிந்தும் இவ்­வாறு செய்­தமை  தொடர்பில் நான்  எதிர்ப்பை வெளியிட்­டி­ருந்தேன்.  அதன்­பின்னர் இது­வரை  எந்­த­வொரு கூட்­டத்­துக்கும் எனக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை.

மேலும் மிகவும் தான்­தோன்­றித்­த­ன­மான முறையில்   கட்­சியின் யாப்­பையும் மீறி  பொது­ஜன பெர­மு­ன­வுடன் கூட்­டணி அமைத்­துக்­கொண்­டுள்­ள­துடன் அதன் வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

 

இன்­று­வரை  நான் உள்­ளிட்ட கட்­சியின் நிறை­வேற்று செயற்­கு­ழு­வுக்கும்  அகில இலங்கை  செயற்­கு­ழு­வுக்கும் முறை­யாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை. நிலைமை இவ்­வாறு இருந்தும் நான்  மௌன­மாக இருந்தேன். அப்­போது ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியின் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை கைச்­சாத்­திடும் நிகழ்­வுக்கு எனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்டு நான் அதில் பங்­கேற்றேன்.

பல்­வேறு கட்­சி­களின் கூட்­டங்­களில் ஏனைய கட்­சி­யினர் பங்­கேற்­ப­தைப்­போன்று நானும் பங்­கேற்றேன். இதற்கு  முன்னர் 2016 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் சம்­மே­ள­னத்தில் என்­னுடன் நீங்­களும் பங்­கேற்­றி­ருந்­தீர்கள். தற்­போது சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பா­ளர்கள் முக்­கி­யஸ்­தர்கள் உள்­ளிட்ட பலர் என்னை பல தட­வைகள் சந்­தித்து  சுதந்­திரக் கட்­சிக்கு பொது பெர­மு­ன­வுடன் இணைந்­த­மைக்கும்  கோத்­தாபய­வுக்கு ஆத­ரவு வழங்­கி­ய­மைக்கும் எதிர்ப்பு தெரி­வித்­த­துடன் தமக்கு  வேறு வழியை காட்­டு­மாறு கேட்­டனர்.

ஜன­நா­யக தேசியக் கூட்­டணி  தொடர்பில் நீங்­களும்  எந்த எதிர்ப்­பையும் வெளியி­ட­வில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி மற்றும் பொதுத் தேர்­தலில் தோல்­வி­ய­டை­ய­வி­ருந்த எமது கட்­சியை உங்கள் தலை­மையில் நாங்கள் மீட்டு கொண்­டு­வந்தோம்.

தற்­போது எமது கட்­சியை  அழிப்­ப­தற்கு சிலர் முயற்­சிக்­கின்ற சந்­தர்ப்­பத்தில்  கட்­சியை பாது­காத்து  எமது அர­சாங்­கத்தை அமைத்து   ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு அதன் பயனை பெற்­றுக்­கொ­டுக்க இதனை தவிர வேறு வழி­யில்லை என்று கரு­து­கின்றேன்.

பொது­ஜன பெர­முன கட்­சி­யுடன் செய்­து­கொண்­டுள்ள உடன்­ப­டிக்கை மூலம் சுதந்­திரக் கட்சி இறுதி பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளது.   உடன்­ப­டிக்­கையின் 12 ஆவது பிரிவு இதனை  வெளிப்­ப­டுத்­து­கின்­றது. 1980 களில் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவை கட்­சி­யி­லி­ருந்து விரட்ட மஹிந்­தவும்  மைத்­தி­ரி­பால சேனா­நா­யக்­கவும்  சதி செய்­தனர். ஜே.ஆர். ஜய­வர்த்­த­னவும் கொப்­பே­க­டு­வவும் போட்­டி­யிட்­ட­போது மஹிந்த பசில் ராஜ­ப­க்ஷவை   ஐக்­கிய தேசிய கட்­சிக்கு அனுப்பி  கொப்­பே­க­டுவ தோற்­ப­தற்கு வழி­ச­மைத்தார்.

அதன் பய­னாக 17 வரு­டங்கள் எமது ஆத­ர­வா­ளர்கள் தாக்­கு­த­லுக்கு உட்­பட்டு எதிர்க்­கட்­சியில் இருந்­தனர். 1994 ஆம் ஆண்டு நான்  மேற்­கொண்ட முயற்­சியில் மீண்டும் எமது ஆட்சி வந்­தது. அதற்கு மஹிந்த எந்த ஆத­ர­வையும் வழங்­க­வில்லை.  எனினும் நான் அவ­ருக்கு  அமைச்­ச­ரவை பதவி ஒன்­றையும் வழங்­கினேன்.

ஆனால் 2001 ஆம் ஆண்டு எமது கட்­சி­யி­லி­ருந்த 9 பேரை  ஐக்­கிய தேசிய கட்­சிக்கு அனுப்பி அவர்­களின் அராசங்கம் உருவாக வழி சமைத்து அவர்கள் ஊடாக எனக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவரவும் சதி செய்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியின் தலைவரான பின்னர்  திட்டமிட்டு கட்சியை அழித்து தற்போது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர். ஆனால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு எதிராக  அறிவிப்பு ஒன்றைக்கூட விடுக்கவில்லை. எனவே  எனது செயற்பாட்டின் ஊடாக கட்சிக்கு எவ்விதமான சேதமும் ஏற்படாது என்று நம்புகின்றேன்.