ஐடிஎன்னிற்கு எதிராக தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள தடையுத்தரவு தொடர்பில் கடும் சர்ச்சை வெடித்துள்ளது.
ஐடின் அரசியல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதித்துள்ள தேர்தல் ஆணையாளர் அரசியல் நிகழ்ச்சிகள் தொடர்பான உள்ளடக்கங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையகத்திடம் அனுமதி பெறவேணடும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஐடிஎன்னிற்கு கடிதமொன்றை மகிந்த தேசப்பிரிய அனுப்பிவைத்துள்ளார்.
பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவிற்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் விதத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதாக தேர்தல் ஆணையகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையை எடுப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை இந்த உத்தரவை மூன்று தேர்தல் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் கடுமையாக கண்டித்துள்ளார்.
ஐடிஎன்னிற்கு தடைவிதிப்பது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை இது குறித்து ஆராய்வதற்காக தேர்தல் ஆணையகத்தின் கூட்டம் எதுவும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார் என சண்டே ஓப்சேவர் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடவில்லை என சண்டே ஒப்சேவரிற்கு தெரிவித்துள்ள அவர் இந்த பிழையான ஆலோசனையின் அடிப்படையிலான நடவடிக்கை மக்கள் தேர்தல்கள் குறித்து சமமான செய்திஅறிக்கையிடல்களை பெறுவதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை குறிப்பிட்ட ஒரு வேட்பாளர்களிற்கு ஆதரவாக மாத்திரம் செயற்படு;ம் தனியார் ஊடக நிறுவனங்களை மக்கள் நம்பியிருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுயாதீனமாக செயற்படவேண்டிய எங்கள் ஆணையகம் பக்கச்சார்பாக செயற்படுகின்றது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என அவர் சண்டே ஒப்சேவரிற்கு தெரிவித்துள்ளார்.

