சிறுபான்மை மக்களின் ஆதரவைப்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாரிய சதியொன்று அரங்கேற்றப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அரபிகளின் வாகனமே ஒட்டகம் எனக் கூறிக்கொண்டு அரபிகளின் பணத்தை வாரி வீசி ஒருவர் களமிறங்கியுள்ளார். தான் போகுமிடம் எல்லாம் கேள்வி பதில் என்ற போர்வையில் பல வியாக்கியாணங்களை வழங்குகின்றார். சஜித்தை ஆதரிக்கும் முஸ்லிம் தலைமைகளை விமர்சிக்கின்றார். ” எனவும் தெரிவித்துள்ளார்.
“குறித்த ஜனாதிபதி வேட்பாளரின் செயற்பாடுகள் அனைத்தும் எதிரணி வேட்பாளரை பலப்படுத்தும் செயலென வெளிப்படையாகவே தெரிகின்றது. கொழும்பில் இருக்கும் மற்றுமொரு முஸ்லிம் அரசியல் புதுசுகள் இஸ்லாமிய சமுதாயத்தின் காவலர்கள் தாங்களே என வெட்கமில்லாமல் கூவித்திரிகின்றனர்.
வட-கிழக்கு மண்ணை இவர்கள் என்றைக்குமே மிதித்தவர்களும் அல்ல. அந்த மக்களின் கஷ்டங்களை அறிந்திராதவர்கள். துன்பங்களுக்கு உதவாதவர்கள். இப்போது புதியதொரு ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டு கோட்டாவை வெல்ல வைப்பதற்காக களமிறங்கியுள்ளனர் .” எனவும் கூறியுள்ளார்.

