முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை ரத்துச் செய்யுமாறு கோரி அவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள திருத்தப்பட்ட மனுவினை எதிர்வரும் மாதம் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, இந்த வழக்குடன் தொடர்புடைய எழுத்து மூல விரிவுரைகள் இருந்தால் அவற்றை நவம்பர் மாதம் 13 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குறித்த எழுத்து மூல விரிவுரை தொடர்பில் பதில் எழுத்து மூல விரிவுரை இருந்தால் அவற்றை நவம்பர் மாதம் 20 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் சதொச நிறுவனத்தில் 153 ஊழியர்களை அவர்களின் பணிகளில் இருந்து நீக்கி அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதன் ஊடாக அரசாங்கத்திற்கு நான்கரை கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி தனக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள முறை சட்டவிரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்ததாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு நீதவானின் உத்தரவினை சவாலுக்கு உட்படுத்தி திருத்தப்பட்ட மனுவொன்றை தாக்கல் செய்திருந்த போதும் கொழும்பு உயர்நீதிமன்றம் அதனை நிராகரித்ததாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதன் காரணமாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கி தனக்கு எதிரான தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை ரத்துச் செய்யுமாறு ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியுள்ளார்.

