அன்று கொலை செய்தவர்கள் இன்று அப்பாவி போல் நடிக்கின்றனர்-சஜித்

299 0

கடந்த ஆட்சி காலத்தில் பொதுமக்கள் நிவாரணம் கோரிய போது எதிர்க்கட்சி வேட்பாளரின் அரசாங்கம் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு பொதுமக்களை மற்றும் ஊடகவியலாளர்களை கொலை செய்ததாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அந்த கொடூர ஆட்சியினை முன்னெடுத்த நபர்கள் நிகழ்காலத்தில் மீண்டும் நாட்டினுள் கொலைகார சகாப்தத்தை உருவாக்க அப்பாவி போல் நடித்து நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.

கம்பஹா, கட்டான பிரதேசத்தில் நேற்று (22) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, ” எதிர்க்கட்சி வேட்பாளர் இன்று மேடை மேடையாக ஏறி தான் அப்பாவி என்று அவரது வாயிலேயே தெரிவித்து போலியான அப்பாவித்தனத்தை பொதுமக்களுக்கு காட்டுகின்றார்.

பொதுமக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தருவதாக கூறுகிறார். எனினும் அவர் அதிகாரத்தில் இருந்த கடந்த காலத்தில் மக்கள் வாழ வழியின்றி நிவாரணம் கோரிய போது இதே அப்பாவி எதிர்க்கட்சி வேட்பாளர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு பொதுமக்களை கொலை செய்தார்.

ரதுபஸ்வெல மக்கள் குடிநீர் இன்றி ஆட்சியாளர்களுக்கு தமது வேதனைகளை தெரிவித்த போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தனர். ஊழியர் சேமலாப நிதிய மோசடிக்கு எதிராக கடானவில் மக்கள் வீதிக்கு இறங்கி போராடிய போது ரொஷான் சானக கொலை செய்யப்பட்டமை பொதுமக்களுக்கு மறந்திருக்காது.

நீர்க் கொழும்பில் மீனவர்கள் எரிபொருள் கோரி ஆட்சியாளர்களுக்கு தமது வேதனைகளை தெரிவித்த போது இந்த அப்பாவி நபர்கள் பெர்ணான்டோவை கொலை செய்தனர்.

அதிகாரத்தில் இருக்கும் போது இந்த அப்பாவி நபர்கள் மேற்கொண்ட கொலை, ஊழல், மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்கிய லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர், காணாமல் ஆக்கப்பட்டனர். தற்போது இந்த அப்பாவிகள் நிவாரணம் பெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பொதுமக்களை ஏமாற்றி கொலைக்கார யுகத்தினை ஆரம்பிக்க தயாராவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.