ஒப்பந்த பணியாளர்களை பணி நிலைப்பு செய்க: ராமதாஸ் அறிக்கை

285 0

ramdoss_3062949fஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிறைந்திருக்கும் வலியை உணர்ந்து அவர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதுடன், பணி நிலைப்பும் வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தொழிலாளர்களின் ஊதியம் பெறும் உரிமை தொடர்பாக கடந்த 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்படும் மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்க இந்தத் தீர்ப்பு பெருமளவில் உதவும்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி ஒருவர், நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக தமக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், நிரந்தரப் பணியாளர்களையும், தற்காலிக ஊழியர்களையும் ஒன்றாக கருத முடியாது என்று கூறி அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து ஊழியர் தொடர்ந்த வழக்கில்,‘‘ 20 ஊழியர்களுக்கும் கூடுதலாக நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சம வேலை, சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும்’’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஜே.எஸ். கெஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

பழங்கால கொத்தடிமை முறையின் நவீன அடையாளமாகத் தான் இன்றைய ஒப்பந்தத் தொழிலாளர் முறை அமைந்திருக்கிறது. தொடக்கத்தில் நிரந்தரப் பணியாளர்களை தேர்வு செய்வதற்கு காலதாமதம் ஏற்படும் போது, பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இடைக்கால ஏற்பாடாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர் முறை, இப்போது குறைந்த ஊதியத்தில் நிறைய வேலை வாங்கும் நடைமுறையாக மாறியிருக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்ட பிறகு தான் இத்தகைய சீரழிவு தொடங்கியிருக்கிறது. நிரந்தரப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.50,000 என்றால், ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.10,000 மட்டுமே வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், நிரந்தர பணியாளர்கள் செய்வதைவிட ஒப்பந்தத் தொழிலாளர்கள் 5 மடங்கு அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. செங்கல் தயாரிக்கும் சூளையில் தொடங்கி சட்டங்களை உருவாக்கும் சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை ஒப்பந்தத் தொழிலாளர் முறை பரந்து விரிந்து கிடப்பது சமூகத்தின் அவலமாகும்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்றால் அவர்களை விரும்பும் வரை வேலையில் வைத்திருக்கலாம், விரும்பிய ஊதியத்தை மட்டும் அளித்தால் போதுமானது என பல வசதிகள் இருப்பது தான் ஒப்பந்த தொழிலாளர்களின் இன்றைய அவல நிலைக்கு காரணமாகும். மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டிய மத்திய, மாநில அரசுகளே ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு மாறியதால், இந்த நவீன கொத்தடிமை முறையில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்ற ஆளில்லாமல் போய்விட்டது. கல்வி வளர்ச்சி காரணமாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானவர்கள் படித்து முடித்து வேலைவாய்ப்பு சந்தைக்கு வருகின்றனர்; ஆனால், அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தக்காளி விளைச்சல் அதிகரித்தால் காய்கறி சந்தையில் விலை குறையும் என்பதைப் போல, படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வேலைவாய்ப்பு சந்தையில் அவர்களின் ஊதியம் குறைந்து வருகிறது. மக்கள் நல ஆட்சி வழங்குவதாக கூறிக் கொள்ளும் இந்திய ஜனநாயகத்திற்கு இது நல்ல அறிகுறி அல்ல.

ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் உழைப்பை உறிஞ்சி, உரிய ஊதியம் தர மறுப்பதில் தனியாரை விட அரசு நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலுள்ள 12,000 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிலைப்பு கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை. தமிழகத்தில் கல்வித் துறையில் 16,549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த முறையிலேயே நீடிக்கின்றனர். இவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க நான் பலமுறை குரல் கொடுத்தும், போராடியும் அவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை 300-க்கும் குறைவு தான்; அதேநேரத்தில் இதன் ஒப்பந்த பணியாளர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் அதிகமாகும். 15 ஆண்டுகளாக பணியாற்றும் இவர்களுக்கு அதிகபட்ச ஊதியமே ரூ.7,000 தான். இவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்தும் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. தொழிலாளர்களை ஒடுக்குவதில் அரசு எவ்வளவு தீவிரமாக செயல்படுகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம் ஆகும்.

ஒப்பந்த தொழிலாளர்களின் நிலை குறித்து நீதிபதி கெஹர் சில உண்மைகளை மிகவும் உருக்கமாக கூறியுள்ளார். ‘‘ குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் நிலைக்கு ஆளாக்கப்படுபவர்கள் தாங்களாக முன்வந்து அதை செய்வதில்லை. தங்கள் குடும்பத்திற்கு உணவும், உறைவிடமும் வழங்குவதற்காக, தங்களின் கண்ணியத்தையும், சுயமரியாதையையும் பலிகொடுத்து தான் செய்கின்றனர். குறைந்த ஊதியத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் தம்மை நம்பியிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கு இணையான பணி செய்பவர்களைவிட குறைந்த ஊதியம் வழங்கப்பட்டாது அது அவர்களை அடிமைப்படுத்துவதற்கு சமமாமாகும். இது அடக்கி, ஒடுக்கி அச்சுறுத்தும் செயல் என்பதில் ஐயமில்லை’’ என்று அவர் கூறினார்.

நீதிபதி குறிப்பிட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிறைந்திருக்கும் வலியை உணர்ந்து அவர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதுடன், பணி நிலைப்பும் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உரிய ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.