மக்கள் சேவகனாக அவர்களது பாதங்களைத் தவிர வேறெந்த சர்வதேச அல்லது உள்நாட்டு நிபந்தனைகளுக்கும் அடிபணிய மாட்டேன் என தெரிவித்த புதிய ஜன நாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அருகிலிருப்பவர் முகத் தை பார்க்கும் காலம் வரும் வரை தான் அதிகாரத்தைப் பற்றிக்கொண்டிருக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உடுநுவர – கெலிஓயா நகரத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தற்போது பலரது நிபந்தனைகளுக்கு நான் இணங்கியுள்ளதாக பரவலாகப் பேசப்படு கிறது. நிபந்தனைகளுக்கு அடிபணியும் அல்லது அதற்காக சேவை செய்பவன் நான் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நிபந்தனைகளுக்கு அடிபணிந்திருந்தால் இதற்கு முன்னரே வேட்பாளராகியிருக்க முடியும்.
ஆனால் தற்போது நான் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது எவ்வித நிபந்தனைகளுக்கும் அடிபணிந்ததால் அல்ல என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றேன். மக்களின் ஆணையுடன் எவ்வித நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் நாட்டுக்காக சேவையாற்றுவேன். பொதுமக்களின் நிலைப்பாடுகளும், அவர்களது அபிலாஷைகளுக்கும் அவர்களின் கால்களில் மாத்திரம் அடிபணிவேனே தவிர வேறெந்த சர்வதேச அல்லது உள்நாட்டு நிபந்தனைகளுக்கும் அடிபணிய மாட்டேன்.
தற்போது நான் கூட்டங்கள் நடத்தும் இயந்திரம் போல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். ஒரு நாளில் சுமார் 5 — 6 மக்கள் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்.
இரு தொகுதிகளுக்கு ஒரே கூட்டத்தை நடத்தலாமே என்று சிலர் கேள்வியெழுப்புகின்றனர். நான் மக்களிடம் செல்ல விரும்புகின்றேன். அவர்களின் சுக துக்கங்களை அறிந்த நபராக இருக்கின்றேன். மக்களுக்கு பலத்தை வழங்குகின்றேன். எனவே மக்கள் இல்லாத இடத்தில் எனக்கு பலம் இல்லை என்று கருதுகின்றேன்.
தற்போது எனக்கு 52 வயதாகின்றது. இது நான் வேகமாக செயற்படும் காலமாகும். எனினும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத, கேள்விகள் கேட்கப்படும் போது ஏனையவர்களின் முகத்தை பார்க்கும் வயது எனக்கும் வரும். எனினும் நான் அதுவரைக் காலமும் அரசியலில் இருக்கப் போவதில்லை. என்னால் இயன்ற வரை மக்களுக்கு சேவை செய்யக் கூடிய காலம் வரை மாத்திரமே நான் அரசியலில் ஈடுபடுவேன்.
அதிகாரத்தைப் பற்றிக் கொண்டு செல்லாமல் இருக்கும் அரசியல்வாதி நான் அல்ல. நான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதற்கும், செல்வதற்கும் தயாராகவே இருக்கின்றேன். ஆனால் அதனை பொதுமக்களே தீர்மானிக்க வேண்டும். நாட்டு மக்கள் தமக்கான ஜனாதிபதியை தெரிவு செய்யும் போது தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எதிர்பார்க்கின்றனர். வாழ்க்கை செலவைக் குறைத்து சிறந்த வாழ்வாதாரத்தை அமைத்து தருவார் என்று எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு மக்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புக்களை பொறுப்பேற்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
உடுநுவர பிரதேசத்தில் தேயிலை உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகள் இடம்பெறுகின்றன. எனினும் அவற்றை சிறந்த முறையில் கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அனைத்து சிக்கல்களையும் ஒரே தடவையில் எம்மால் நீக்க முடியும். நாட்டை பலப்படுத்த வேண்டுமானால் மக்களை பலப்படுத்த வேண்டும்.
மக்களை பலப்படுத்த பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும். எனினும் மக்கள் தற்போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் வாழ்க்கை செலவைக் குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன் என்றார்.

