தேர்தல் வெற்றிக்காக தமிழ் மக்களிடம் போலியான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றமாட்டோம். வடக்கு மற் றும் கிழக்கில் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகள் பல காணப்படுகின்றன. அவற்றிற்கு முழுமையான தீர்வு குறுகிய காலத்திற்குள் வழங்கப்படும் என பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்
வடக்கில் தமிழ் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 அம்ச திட்டத்தினை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிராகரித்துள்ளமை சாதாரண விடயமேயாகும்.இந்த நிராகரிப்பினைக் கொண்டு அவர் தமிழ் மக்களுக்க எதிரானவர் என்று கருதுவது முற்றிலும் தவறானதாகும்.
13 அம்சத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நிறைவேற்றப்படும் என்று போலியான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை கிடையாது. தேர்தல் வெற்றியினை கருத்திற் கொண்டு செயற்படுவதாக இருந்தால் நல்லாட்சி அரசாங்கம் போல் பல வாக்குறுதிகளை வழங்கலாம். முடிந்த விடயங்களை மாத்திரமே தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவோம். இதில் தமிழ் – சிங்கள மக்கள் என்ற வேறுப்பாடு கிடையாது.
அரசியல் தீர்வு என்ற விடயத்தை குறிப்பிட்டே ஐக்கிய தேசிய கட்சி தமிழ் மக்களின் ஆதரவுடன் அதிகாரத்தை கைப்பற்றியது. கடந்த நான்கரை வருட காலமாக அரசியல் குறித்து முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் பயனற்றதானது. ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயற்படும் போது அதன் எதிர்விளைவு பிறிதொரு தரப்பினருக்கு தாக்கம் செலுத்துவதாக காணப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கம் அரசியல் தீர்வு என்ற விடயத்தை குறிப்பிட்டே கடந்த நான்கரை வருட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது.
அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பிலும், அந்தஸ்த்திலும் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. மாறாக தேவையற்ற விடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள்.இறுதியில் அரசியல் தீரவு கிடைக்கப் பெறவில்லை. வடக்கு கிழக்கிற்கு அபிவிருத்தியும் ஏற்படுத்தப்படவில்லை. இதில் ஏமாற்றமடைந்தது தமிழ் மக்கள் மாத்திரமேயாகும்.
தமிழ்அரசியல் தலைமைகள் சுய நல போக்குடனே செயற்படுகின்றார்கள். அதன் காரணமாகவே தமிழ் மக்களின் ஆதரவினை கோருகின்றோம். எத்தரப்பினரும் முரண்படாத வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்திகளை முன்னெடுப்போம் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்களும் கிடையாது.
தமிழ் மக்கள் பொது யதார்த்த நிலைமையினையும், நல்லாட்சி அரசாங்கத்தில் ஏமாற்றப்பட்டதையும் புரிந்துக் கொண்டு அரசியல் ரீதியில் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

