அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்தல விமான நிலையத்தினுள் நெல் களஞ்சியப்படுத்தியதன் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடி குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பாக தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கமைய வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நாளை (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சில நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதால் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று எழுத்து மூலம் அவருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
யாழ்.சர்வதேச விமான நிலைய திறப்பு விழா மற்றும் ஏனைய பல அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

