நாட்டில் நெடுங்காலமாக ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்றாக அழித்து, குடும்ப ஆட்சியை மேலோங்கச் செய்வதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள். எனினும் சுதந்திரக் கட்சியை உண்மையில் நேசிப்பவர்களும், சுயகௌரவம் இருப்பவர்களும் எமது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் மேலும் பலர் எம்மோடு இணைந்து கொள்வார்கள் என்று பொது நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, உள்ளிட்டவற்றின் பிரதேச, நகரசபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் 44 பேர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று உத்தியோகபூர்வமாக அவருடன் இணைந்து கொண்டனர்.
இது குறித்து தெளிவுபடுத்தும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள புதிய நகர மண்டபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
எமது புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதற்காக எம்மோடு இணைந்து கொண்டவர்களுக்கு நன்றி யைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாட்டில் பல்வேறு புதிய கட்சிகள் உருவாகிய போதிலும் ஜனநாயகத்தின் அடையாளமாக தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இருந்து வருகின்றன. ஆனால் அவ்வாறானதொரு சிறந்த வரலாற்றைக் கொண்ட சுதந்திரக் கட்சியை நாசமாக்கி, குடும்ப ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதற்கு சிலர் திட்டமிடுகின்றனர்.
ஆனால் சுதந்திரக் கட்சியை உண்மையில் நேசிப்பவர்களும், சுயகௌரவம் இருப்பவர்களும் எமக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கின்றார்கள். எனக்கும், விஜித் விஜயமுனி சொய்சாவுக்கும் இடையில் கடந்த காலத்தில் பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டன. ஆனால் தற்போது நாங்கள் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறோம். எம்மால் ஒன்றிணைய முடியுமென்றால் வேறு எவராலும் எம்மோடு இணைய முடியும் என்றே அர்த்தம். நாமனைவரும் குடும்ப ஆட்சியொன்று நாட்டில் உருவாகுவதை எதிர்க்கின்றோம். ஏகாதிபத்தியவாதத்தை முழுமையாக ஒழித்து, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே எம்முடைய எதிர்பார்ப்பாகும் என்றார்.
மின்சாரம், சக்தி வலு மற்றும் திட்ட அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிடுகையில்,
நாமனைவரும் ஒன்றிணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு வென்றெடுத்த ஜனநாயகத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும். அதனூடாக மக்களை வெற்றி பெறச்செய்வதே எம்முடைய ஒரே குறிக்கோளாக இருக்கின்றது. கடந்த
5 வருட காலத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்ததன் ஊடாக எதனைச் சாதித்தீர்கள் என்று சிலர் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். அந்த ஜனநாயகத்தின் விளைவாகவே இன்று அனைவரும் சுதந்திரமாக செயற்பட முடிகிறது என்பதை மனதிலிருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

