பிரசாரக் கூட்டங்களை நடத்தாவிட்டாலும் சஜித் வெற்றி பெறுவார் – திகாம்பரம்

209 0

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பிரசாரக் கூட்டங்களை நடத்தாவிட்டால்கூட, அவருக்கான வெற்றி உறுதியாவிட்டதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர் பெறுவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கோ அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கோ எந்த விதமான தடுமாற்றமும் இல்லை.

தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தமிழ் முற்போக்கு கூட்டணி உறுதியான தீர்மானத்தை எடுத்து அதற்கான அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு பாடுபடத் தயாராக இருக்கின்றோம்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு 2 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் நிச்சயம் கிடைக்கும். அவர் அமோக வெற்றி பெற்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதை யாராலும் தடுக்க முடியாது.

மலையகத்தில் உள்ள ஏனைய அமைப்புகள் அவற்றின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானத்தை மேற்கொள்ளும்போது அது தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.

மலையகத்தின் பல பகுதிகளிலும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு தொடர்ச்சியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவர் மலையகத்தில் கலந்துகொள்ளும் பிரம்மாண்டமான கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.