ஐ.தே.க.ஆட்சியைக் கைப்பற்றும் என்பது மேற்கில் சூரியன் உதிப்பதற்கு ஒப்பான கருத்தாகும்- மஹிந்த

44 0

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் அடுத்த ஆட்சியைக் கைப்பற்றும் என்பது, மேற்கில் சூரியன் உதிப்பதற்கு ஒப்பான ஒரு கருத்தாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,  “எல்பிட்டிய தேர்தல் முடிவுகளைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நாம் எதிர்ப்பார்த்தது போல நூறுவீத வெற்றியை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். இதற்காக நாம் எல்பிட்டிய மக்களுக்கு இவ்வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எதிர்வரும் 16 ஆம் திகதியன்றும் இதே பெறுபேறுதான் எமக்குக் கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது. எதிரணி மேடைகளில் எல்லாம், இன்று சேறு பூசுவதைத் தான் தேர்தல் பிரசாரமாகக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி எல்பிட்டிய தேர்தலில் வெற்றிப் பெறுவது உறுதி என்று கூறினார்கள். அப்படி வெற்றி கிடைக்காவிட்டால், அது மேற்கில் சூரியன் உதிப்பதற்கு சமமாகும் எனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இப்போது என்ன நடந்துள்ளது? நாமும் ஒன்றைக் கூறிக்கொள்கிறோம். நாட்டில் அடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி என்பதும் மேற்கில் சூரியன் உதிப்பதற்கு சமமாகும்.

அது ஒருபோதும் நடக்காது. இந்த நாட்டை நாம் மீட்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். இவ்வாறு செய்யக்கூடிய ஒருவரைத்தான் நாம் வேட்பாளராக தற்போது களமிறக்கியுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.