மலையக தேசிய முன்னணி சஜித்திற்கு ஆதரவு!

187 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு,  வீதி அபிவிருத்தி, வீட்டுத்திட்டம், வேலைவாய்ப்பு, மலையகத்தில் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு மலையக தேசிய முன்னணி தீர்மானித்திருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குதற்கு மேற்கொண்டிருக்கும் தமது தீர்மானம் குறித்து மலையக தேசிய முன்னணியின் தலைவர் வெள்ளையன் தர்மலிங்கம்  பின்வருமாறு குறிப்பிட்டார்.

நாங்கள் மலையகத்திலிருந்து சஜித் பிரேமதாஸவை நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கான தீர்மானத்துடன் களத்தில் இறங்கியிருக்கின்றோம். சஜித் பிரேமதாஸவின் தந்தையாரான ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது மலையகத்திற்கு பல்வேறு சேவைகளை ஆற்றியிருக்கின்றார். அந்தவகையில் அவருடைய மகனான சஜித் பிரேமதாஸவை மலையக மக்களும் விரும்புகின்ற காரணத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு,  வீதி அபிவிருத்தி, வீட்டுத்திட்டம், வேலைவாய்ப்பு, மலையகத்தில் பல்கலைக்கழகம் போன்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி அவரை ஆதரிப்பதற்கு முன் வந்திருக்கின்றோம் என்றார்.

மேலும், மலையக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பெருமாள் அற்புதராஜா கூறியதாவது, இந்த நாட்டின் எதிர்கால சுபீட்சம் மற்றும் சமத்துவத்தைக் கருத்திற்கொண்டு சஜித் ஆதரிப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.