சுபீட்சமானதொரு இலங்கையை உருவாக்கும் பயணத்தை முன்னெடுப்பதற்கான ஆதரவும், பலமும் எமக்கு அவசியமாகும். எனவே எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் மக்கள் தமது உயரிய ஆதரவையும், ஒத்துழைப்பையும் எமக்கு வழங்கவேண்டும். அதனூடாக எம்மைப் பலப்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை மீட்டெடுக்கத்தக்க, துடிப்பான, இளைய தலைமைத்துவத்தை உருவாக்குவதற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எல்பிட்டிய மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின் பின்னர் நேற்று திங்கட்கிழமை பெந்தர, எல்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் பின்னர் நான் முதலாவதாக விஜயம் மேற்கொள்ளும் தேர்தல் ஆசனம் பெந்தர எல்பிட்டிய ஆசனமாகும். இந்த நாட்டில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் உங்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக்கூடிய புதிய பயணமொன்றுக்கான, புதிய எதிர்காலமொன்றுக்கான, பயனுள்ள மக்கள் சேவைக்கான, நாட்டின் அபிவிருத்தியினை நோக்கியதாக, ஒருமித்த நாட்டை மேலும் வலுப்படுத்துகின்ற நகர்வுக்கான ஆரம்பமே இதுவாகும்.
நாமனைவரும் எதிர்பார்ப்பது சுபீட்சம் நிறைந்ததொரு இலங்கையையே ஆகும். நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் ஊடாக சாதாரண பிரஜையொருவரின் உள்ளத்தில் நிறைவை ஏற்படுத்தும் யுகத்தை உருவாக்குவதே அனைவரினதும் விருப்பமாக இருக்கிறது. அந்தப் புதிய யுகத்தை நாங்கள் ஆரம்பிக்கின்றோம். அதில் இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். அந்தப் புதிய யுகத்தில் நாம் தனியொரு குடும்பத்தை முன்நிறுத்துவதை விடுத்து, இந்த ஒட்டுமொத்த நாட்டிற்கும் முதன்மையான இடத்தை வழங்குவோம். அதன்மூலம் வீழ்ந்திருக்கும் இந்த நாட்டை மீட்டெடுப்போம்.
அத்தகையதொரு பயணத்தை முன்னெ டுப்பதற்கான சக்தியும், பலமும் எமக்கு அவசியம். எனவே இந்த எல்பிட்டிய தொகுதிக்கான பிரதேச சபைத் தேர்த லில் உங்களால் இயலுமான உயர்ந்த ஆதரவையும், ஒத்துழைப்பையும் எமக் குப் பெற்றுத்தாருங்கள். அதன்மூலம் என்னை மேலும் பலப்படுத்தி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு துடிப்பான, சிறந்த, இளைய தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு கேட் டுக்கொள்கின்றேன்

