நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டத்திற்கு அழைப்பு

174 0

நாடளாவிய ரீதியில் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு ஒரு நாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை எதிர்வரும் 2019.09.24 ஆம் திகதி அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனால் அரச சேவையைச் சேர்ந்த 90 வீதமான அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தில் பாரிய முரண்பாடு ஏற்படவுள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் எதிர்வரும் திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு முகாமைத்துவ உதவியாளர் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த போராட்டம் தொடர்பாக அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற்சங்கம் ஊடக அறிக்கை ஒன்றை இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ளது.

இதனோடு இணைந்து இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை தொழில்நுட்ப சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை என்பவற்றுடன் மேலும் 17 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும் நாடளாவிய ரீதியில் பாரிய ஒரு நாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது.

எனவே தமது தொழிற்சங்க போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக, எதிர்வரும் வரும் 23ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து சகலரும் ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ. முபாரக் மற்றும் செயலாளர் நாயகம் வ.பற்குணன் ஆகியோரது ஒப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.