சபையில் நிறைவேறியது மக்கள் வங்கி சட்டமூலம்

177 0

மக்கள் வங்கி திருத்த சட்டம் மீதான திருத்தங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  வாக்கெடுப்பை கோரிய நிலையில் எதிர்கட்சியின் திருத்தங்கள் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டு  மக்கள் வங்கி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மக்கள் வங்கி திருத்த சட்டமூலம் இன்றைய தினம் வாக்கெடுப்புக்கு எடுத்துகொள்ளப்பட்ட வேளையில் சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டத்தில் சில திருத்தங்களையும்  முன்வைத்தனர்.

முக்கியமான திருத்தங்களாக  20/1 இன் கீழ் கடன் முறிகளை  பெறுவதில் மத்திய வங்கியின் அங்கீகாரமும் அமைச்சரின் அனுமதியும் வேண்டும் என்று இருந்த நிலையில் மத்திய வங்கியின் அங்கீகாரம் நீக்கப்பட்டுள்ளமை மற்றும்,  20/2 படி நிதி விடயங்களில் அமைச்சரின் நேரடி கட்டுப்பாடு என்ற விடயம்  வலியுறுத்தப்பட்டுள்ளது ஆனால் எந்த அமைச்சர் என இல்லை, அத்துடன் திறைசேரி முறைமையில் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றும், பழைய சட்டத்தில் நிதி அமைச்சரின் செயற்பாடுகளுக்கு  அமைய கொண்டு செல்ல வேண்டும் என்றும் மக்கள் வங்கிக்கு நிதி சபையின் மூலமாக நிதி விவகாரங்களை கையாளவும்  வேண்டும் என்ற காரணிகளை முன்வைத்தனர்.

எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த யோசனைகளை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்தார். அரசாங்கம் சில விடயங்களில் கவனம் செலுத்துவதுடனும் எதிர்க்கட்சி பிரதானமாக கொண்டுவந்த திருத்தங்களை நிராகரிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார்.

இதனை அடுத்து எதிர்க்கட்சியின் திருத்தங்கள் தொடர்பில் சபை வாக்கெடுப்பு கோரப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன வாக்கெடுப்பை கோரினார். அதற்கமைய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு நடத்தியதில் எதிர்கட்சியின் யோசனைக்கு ஆதரவாக 37 வாக்குகளும் எதிராக 72 வாக்குகளும் பதியப்பட்டது. அதற்கமைய அமைச்சர் மங்கள சமரவீர கொண்டுவந்த மக்கள் வங்கி திருத்த சட்டம் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் இல்லாது நிறைவேற்றப்பட்டது.