சஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க

175 0

ஐக்கிய தேசிய கட்சி  ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் வரையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைக்காது.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளரானால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டிலே சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் உள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயகக்கவின் பிரத்தியேக காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவா குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின்ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற போட்டித்தன்மை கட்சிக்குள் பாரிய முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது. மறுபுறம்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பிலும் பேச்சு வார்த்தைகள் இடம் பெற்று அதுவும் தொடர் இழுபறி நிலையில் காணப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் வரையில் சுதந்திர கட்சி  பொதுஜன பெரமுனவுடன் ஒருபோதும் கூட்டணியமைத்துக் கொள்ளாது.  காலத்தை கடத்துவதற்காகவே சின்னம் உள்ளிட்ட தேவையற்ற விடயங்களுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்டால் நிச்சயம் சுதந்திர கட்சி  ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என்றும் கூறினார்.