இஸ்ரோ குழுவுக்கு மு.க.ஸ்டாலின்-கமல் வாழ்த்து!

263 0

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், ராமதாஸ், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் விவரம் பின்வருமாறு:-

கோடிக்கணக்கான மக்களை விண்வெளி நோக்கி பார்க்கவும், அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் ஆற்றல் மீது நம்பிக்கை வைக்கவும் ஊக்கமளித்த இஸ்ரோ குழுவினருக்கு நன்றி.

முன்பைவிட நம்மை ஒருபடி முன்னே கொண்டு சென்றதற்காக நம்முடைய விஞ்ஞானிகள் குறித்து பெருமைகொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

இஸ்ரோவுக்கு ஏற்பட்டது தோல்விக்கு சமமானது அல்ல. ஆராய்ச்சியில் விலை மதிப்பற்ற கற்றலுக்கான தருணம் இது. விரைவில் நாம் நிலவில் இருப்போம். நாடே இஸ்ரோ விஞ்ஞானிகளை நம்புகிறது. பாராட்டுகிறது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- சந்திரயான் விண்கலத்தின் ஆராய்ச்சிக் கருவியை தரையிறக்குவதில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. பின்னடைவை சந்திக்காத விண்வெளி ஆராய்ச்சி உலகில் ஏதுமில்லை. சந்திரயான்-2 முயற்சி மிகவும் அற்புதமானது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்கள் முயற்சி போற்றத்தக்கது.

2.1 கி.மீ. இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியை சுவைப்பர். சாதாரண மனிதனுக்கும் நிலவு ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை சந்திரயான்-2 ஏற்படுத்தி உள்ளது. நிலவை நெருங்கும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும்.

ஜிகே வாசன்

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

சந்திரயான் – 2 வின் நிலவுப் பயணத்திற்கு நமது விஞ்ஞானிகள் மேற்கொண்ட கடினப் பணிகள், தொடர் முயற்சிகள் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கக்கூடிய வெற்றி முயற்சியே. இந்த முயற்சிகள் வரும் காலங்களில் தொடரும், நிலவுப் பயணத்தில் இந்தியா முழு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

சந்திரயான் – 2 வின் நிலவுப்பயணத்திற்கு நமது விஞ்ஞானிகள் மேற்கொண்ட கடினப் பணிகளும், முயற்சிகளும் மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் அறிவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மேலும் இளம் விஞ்ஞானிகளுக்கு உந்துதலையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி இருகிறது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் விண்வெளி ஆராய்ச்சிப் பயணம் வெற்றிக்கரமாக தொடர, வளர, சிறக்க த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.