அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் மின்சார கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாடுகளில் இருந்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளி நாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, 5-ந் தேதியன்று அமெரிக்க நாட்டின், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்திற்குச் சென்று, சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கின்ற வகையிலும், காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையிலும், அந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்கள், பாட்டரிகள், எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆகிய பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள புளூம் எனர்ஜி நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டு, மாசில்லா எரிசக்தியை ஏற்கனவே உள்ள மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்ப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்தும், அத்தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
புளூம் எனர்ஜி நிறுவனமானது, திட ஆக்சைடு எரிபொருள் செல்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான கே.ஆர். ஸ்ரீதர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வுகளின்போது, தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் க.சண்முகம்,
தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபு, முதல்-அமைச்சரின் செயலாளர்கள் எஸ். விஜயகுமார், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ‘பாயிண்ட் குவார்ட் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கிரிஷ் பனு, ‘ஜோஹோ’ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, ‘நியோ’ நிறுவனத்தின் தலைமை தொடர்பு அதிகாரி கணேஷ் வி.அய்யர், ‘அமெரிக்கன் சைபர் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் ராஜ் சர்தானா ஆகியோர் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குவது குறித்து விருப்பம் தெரிவித்தனர்.
இதேபோல ‘பிரோஸ்ட் அண்ட் சுல்லிவன்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்கள் டேவிட் பிரிக்ஸ்டாட், அப்ரார் உசேன், ‘போஸ்கான் மோட்டார்ஸ்’ முதன்மை செயல் அதிகாரி அருண் ஸ்ரீரலம், ‘அல்டியஸ் கேப்பிட்டல் ஐ.என்.சி.’ நிறுவனத்தை சார்ந்த பாலாஜி பக்தவச்சலம், ‘கிளாரி’ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி வெங்கட் ரங்கன், ‘எவர்பார்ஸ்.காம்’ நிறுவனத்தின் நிறுவனர் ஈஸ்வரன் ராமலிங்கம், கோபாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு தொழில்துறையினரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்குவது குறித்து தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மை செயலாளர் நா.முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

