ஐக்கிய தேசிய கட்சியின் மிக முக்கிய கலந்துரையாடல்

325 0

ஐக்கிய தேசிய கட்சியின் மிக முக்கியமான கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி தேர்தல், புதிய கூட்டணி மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவினையும் மீறி நேற்றைய தினம் குருநாகலில் சஜித் அணியினர் மக்கள் கூட்டம் ஒன்றினை வெற்றிகரமாக நடாத்தியிருந்தனர்.

இந்தநிலையில் தற்போது இடம்பெற்று வரும் விசேட கலந்துரையாடலில் இதுகுறித்தும் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரும் வலியுறுத்தல் கடிதம் ஒன்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் குறித்த கடிதம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சஜித்திற்கு ஆதரவான நிலைப்பாடு ஐக்கிய தேசிய கட்சிக்குள் வலுப்பெற்றுள்ள நிலையில், சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ரணில் விக்கிரமசிங்க மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலியுறுத்தல் கடிதம் ஒன்று இதற்கு முன்னரும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.