அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி.பெரேரா ஆகியோர் ஒருபோதும் ஐ.தே.கவின் ஒழுக்க விதிமுறைகளை மீறும் வகையில் செயல்படவில்லை என கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க முடிவெடுத்துள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கபீர் ஹஷிம் இதனை கூறியதோடு, கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அவ்வப்போது பொதுச்செயலாளரிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுவது வழக்கம் என்றும் கூறினார்.
இருப்பினும், இரண்டு உறுப்பினர்களும் எந்த நேரத்திலும் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியதாக நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் சம்பவம் தொடர்பில் அவர்களிடமும் விசாரிக்கப்பட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என தெரிவித்த அவர் இதனை ஒரு பாரிய பிரச்சினையாக கருதவில்லை எனவும் கூறினார்.
இதன்போது குறித்த இரண்டு அமைச்சர்களையும் இலக்கு வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என ஊடகவியலாளர்கள் வினவியதற்கு எதிர்காலத்தில் மேலும் பல கடிதங்கள் அனுப்பப்படலாம் என பதிலளித்தார்.
நீங்களும் ஒழுக்காற்று விசாரணையை எதிர்கொள்வீர்களா என ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வினவினர், இதற்கு பதிலளித்த அமைச்சர் ஒழுக்காற்று நடவடிக்கை அனைவருக்கும் பொதுவானது என அமைச்சர் கூறினார்.
கட்சியில் உயர்ந்த பதவிகளை வகிப்பது அதை; காப்பாற்றாது, ஆனால் மற்ற கட்சிகளைவிட ஐ.தே.கவுக்குள் சுதந்திரமாகப் பேசுவதற்கான உரிமை அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள் சமையலறைகளில் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் ஆனால் ஐ.தே.கவில் அவ்வாறான நிலைமை இல்லை எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

