புகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி

210 0

இலங்கையின் புகையிரத கட்டமைப்பை நவீனப்படுத்தவென ஆசிய அபிவிருத்தி வங்கி 16 கோடி அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கவுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட இருக்கிறது. இலங்கையின் புகையிரத துறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவி வழங்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

புகையிரத துறையின் அபிவிருத்திக்காக இந்த அளவு பெரிய தொகை கிடைக்கப்பெற்றுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தசம் ஐந்து சதவீத சலுகை வட்டியுடன் 29 வருடங்களில் திருப்பிச் செலுத்தக்கூடியவாறு இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாத்தறை – பெலியத்த புகையிரத பாதை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ரெயிலின் வேகத்தை அதிகரிக்கக்கூடிய வகையில் மாகோ, ஓமந்தை பாதை அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. அத்தோடு குருநாகல் ஹபரண புகையிரத பாதையை அபிவிருத்தி செய்யும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சீனா இந்திய ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஞ்ஜின்கள் மற்றும் புகையிரத பெட்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஸ்மார்ட் நுழைவு அட்டைகளை பயன்படுத்துவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

செயற்றிட்டத்திற்கென 19 கோடி 20 லட்சம் ரூபா செலவிடப்படவிருக்கிறது. 2024 ஆம் ஆண்டளவில் இந்த வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்வது இலக்காகும். நாட்டின் புகையிரத சமிக்ஞை கட்டமைப்பும் இதன் மூலம் நவீனமயப்படுத்தப்படும் என்று புகையிரத திணைக்களத்தின் செயற்றிட்ட முகாமையாளர் பாலித்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை வரையிலான புகையிரத பாதையும், கொழும்பு கோட்டையில் இருந்து களுத்துறை வரையிலான பகுதியும், றாகம – நீர்கொழும்பு புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட புகையிரத பாதையும், மருதானையில் இருந்து அவிசாவளை வரையான பகுதியும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.