சவேந்திர சில்வா நியமனம்- ஐநா மனித உரிமை ஆணையாளர் கடும் அதிருப்தி

280 0

இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை ஐக்கியநாடுகளின் அமைதிப்படையணியில் இலங்கை படையினர் பணியாற்றுவதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட்  தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையினால் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவை  இலங்கையின் புதிய  இராணுவதளபதியாக நியமித்தமை குறித்து மனித உரிமை ஆணையாளர் கடும் கரிசனம் வெளியிட்டுள்ளார்.

சவேந்திர டி சில்வாவிற்கு எதிராகவும் அவரது படையணிக்கு எதிராகவும் சர்வதேச சட்டங்கள் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியதாக  பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்ட்டுள்ள போதிலும் இலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

சவேந்திர சில்வாவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின்படி நீதி பொறுப்புக்கூறலை  ஊக்குவிப்பதற்கான இலங்கையின்  உறுதிமொழிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவேந்திரசில்வாவிற்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கின்றது,என தெரிவித்துள்ள  மிச்சல் பச்லெட் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்கள் மத்தியில் இது கடு;ம் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் பாதுகாப்பு துறை சீர்திருத்தத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகள் அமைதிப்படையின் நடவடிக்கைகளிற்கு பங்களிப்பு செய்வதற்கான இலங்கையின் வாய்ப்புகள் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.