புர்காவுக்கு முற்றாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் அதனை தடைசெய்யும் வகையில் சட்டமியற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் நீதி அமைச்சு ஆலோசனை கோரியுள்ளது.
நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஆள் அடையாளம் தெரியாதவகையில் தலை, முகத்தை மூடி ஆடை அணிவது தடைசெய்யப்பட்டிருக்கின்றது.
குறித்த தடையானது அவசரகால சட்டம் நீக்கப்பட்ட பின்னரும் சட்ட ரீதியில் நிரந்தரமாக தடையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால் அமைச்சரவைக்கு கடந்த இரண்டு வரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பதை ஒரு வாரகாலத்துக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலே முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவுக்கு நிரந்தர தடையை ஏற்படுத்தும்வகையில் சட்டம் இயற்றாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது மாத்திரம் அதனை தடைசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமருக்கு ஆலோசனை தெரிவித்திருக்கின்றனர்.

