மாணவர் படுகொலையைக் கண்டித்து பூரண கர்த்தாலுக்கு அழைப்பு!

326 0

download-8-1கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் எதிர்வரும் 25ஆம் திகதி பூரண கர்த்தாலை அனுட்டிக்க தமிழ் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணியும், தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, எதிர்வரும் 25 ஆம் திகதி பூரண கர்த்தாலை அனுட்டிக்க கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில், பூரண கர்த்தாலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பூரண ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதன்பின்னர் இன்றைய தினம் மாலை 3.30 முதல் மாலை 5.30 வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 4 அங்கத்துவ கட்சிகளும் மேலும் 2 கட்சிகளும் இணைந்து அவசரக் கலந்துரையாடல் நடத்தியிருந்தன.

இதனையடுத்து, யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சிகளின் தலைவர்கள் கர்த்தாலுக்கான அழைப்பை விடுத்துள்ளனர்.

இதன்போது, கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அரச பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதை காணக் கூடியதாக இருப்பதாகவும், இதனை தமிழ்மக்கள் விரும்பவில்லை என்பதை சர்வதேசத்திற்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தெளிவாக எடுத்துரைக்கவும் கர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஹர்த்தாலுக்கு வட மாகாணத்திலுள்ள வர்த்தக அமைப்புக்கள், பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து தமது ஆதரவினை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றார்கள்.

மேலும் இக்கர்த்தாலுக்கு வடக்கு மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், அனைத்தும் முழுமையாக மூடப்பட்டு ஆதரவு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.