இந்து ஆலயங்கள் மற்றும் அமைப்புகளுக்கு சட்ட ரீதியிலான நிர்வாக கட்டமைப்பு-வேலுகுமார்

304 0
“இந்து ஆலயங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை சட்டரீதியிலான நிர்வாக கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் தெரிவித்தார்.

இதற்காக உங்கள் ஊர் தேடி வந்து உயரிய சேவைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

இந்து சமய விவகார அமைச்சின் இந்து – சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “பெரும்பாலான இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியன இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் உரிய வகையில் பதிவு செய்யப்படாததால் ஏதேனும் பிணக்குகள் – நெருக்கடிகள் ஏற்படும்பட்சத்தில் சட்டரீதியிலான பாதுகாப்பை, நீதி நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அத்துடன், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டை நேரடியாக கையளிப்பது உட்பட அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் சிக்கல்நிலை தோன்றியுள்ளது. எனவே, மேற்படி நிறுவனங்களை ஓர் சட்ட ரீதியிலான நிர்வாகப் பொறிமுறைக்குள் கொண்டுவர வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.

மேற்படி செயற்றிட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கும் – மேலும் பல சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காகவும் ´உங்கள் ஊர் தேடி வரும், இந்து – சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை´ என்ற வேலைத் திட்டத்தின் கீழ் துரித சேவைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதலாவது சேவை நாளை மறுதினம் 10 ஆம் திகதி வடகொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. அதன்பின்னர் நாடு முழுவதிலும் கட்டங்கட்டமாக நடைபெறும். எனவே, இந்து – சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவையில் பங்கேற்று இந்து குருமார்கள். அறங்காவலர்கள், அறநெறி ஆசிரியர்கள், இந்து மன்ற செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அழைப்பு விடுக்கின்றேன்.

இலங்கையில் பௌத்த மதத்துக்கென மகாநாயக்க தேரர்களும், பௌத்த பீடங்களும் உள்ளன. இஸ்லாமியர்களுக்கு உலமா சபை இருக்கின்றது. அதேபோல் கிறிஸ்தவர்களுக்கு திருச்சபைகள் உள்ளன. ஆகவே, இந்துக்களுக்காக தேசிய இந்து மகா சபை ஒன்று உருவாக்கப்படும். இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தலைவர் மனோ கணேசன் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி தேசிய இந்து மகா சபையின் உருவாக்கம் தொடர்பிலும் அதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளது.

இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், இந்து அறநெறிப் பாடசாலைகள், தமிழ்க் கலைமன்றங்களிடமிருந்து தகவல்களைப் பெற்று அவற்றை உரிய வகையில் பதிவு செய்தல், மேற்படி கட்டமைப்புகளில் நிலவும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

அது மட்டுமல்ல இந்து குருமார்களின் தகவல்களை பெற்று – பதிவு செய்து அவர்களுக்கு அடைய அட்டை வழங்கப்படவுள்ளது. அதேபோல் தமிழ்க் கலைஞர்களை பதிவு செய்தல் உட்பட மேலும் பல சேவைகளை உங்கள் ஊர் தேடிவந்து வழங்கவுள்ளோம். ஆகவே, பங்கேற்று பயன்பெறுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்.’’ எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.