குமரி குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு

282 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற குமரி குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபர் ஒருவர் மர்மமான நிலையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வழக்கமாக குறித்த குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபரை நேற்று (07) மீன்பிடிக்கச் சென்ற நிலையில் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் இரவு முழுவதும் தேடி இன்று (08) காலை சடலமாக மீட்டுள்ளனர்.

குறித்த நபர் பகல் வேளைகளில் மேசன் தொழில் செய்வதோடு, மாலை வேளைகளில் குறித்த குளத்தில் சென்று மீன் பிடித்து தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையிலே நேற்று (07) மாலை 5 மணி அளவில் வீட்டில் இருந்து குறித்த குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்றவர், வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் அனைவரும் சேர்ந்து இரவு 8 மணி முதல் குறித்த குளத்தில் தேடுதல் நடத்தியுள்ள நிலையில் இன்று (08) அதிகாலை 4.30 மணி அளவில் குறித்த நபர் சடலமாக காணப்படுவதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மல்லாவி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் நீரில் மூழ்கியே உயிரிழந்திருக்கலாம் என குறித்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் செல்வபுரம் வவுனிக்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா சுரேஷ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார்.