காய்ச்சல் நோயாளர்களுக்கு சுகாதார அமைச்சின் அவசர எச்சரிக்கை !

236 0

பொதுமக்கள் எவரும் காய்ச்சலுக்காக அஸ்பிரின் (Aspirin) உள்ளிட்ட ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (non-steroidal anti-inflammatory drugs NSAIDS) மற்றும் ஸ்ரிறொயிட் (Steroid) மருந்துகளைப் பாவிக்கவேண்டாம் எனச் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

Related image

தற்போது இலங்கையின் பல மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கமானது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தென்மேற் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.

இந்நிலையில் சில டெங்குக் காய்ச்சல் நோயாளிகள் குறிப்பிட்ட சில மருந்து வகைகளைப் பாவித்த காரணத்தால் அவர்களது நிலைமை மோசமடைந்ததுடன் சிலர் உயிரிழந்தும் உள்ளதாக சுகாதார அமைச்சுக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே காய்ச்சல் காணப்படும் நோயாளர்கள் கீழ்க்காணும் மருந்துகளைப் பாவிக்கவேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க அவசர ஊடக அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.

அதன்படி அஸ்பிரின் (Aspirin), புருபன் (Ibuprofen) , டைக்கிலோபெனாக் சோடியம் (Diclofenac sodium), மெபனமிக் அசிட் (Mefenamic acid) மற்றும் இவ்வகையினைச் சேர்ந்த வேறு ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், மேலும் ஸ்ரிரொயிட் வகையினைச் சேர்ந்த மருந்துகளான பிறெட்னிசலோன் (Prednisolone) மீதைல் பிறெட்னிசலோன் (Methylprednisolone) மற்றும் டெக்ஸாமெத்தசோன் (Dexamethasone) ஆகிய மருந்துகளை காய்ச்சல் நோயாளர்கள் உள்ளெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்கும் வைத்தியர்கள் காய்ச்சல் நோயாளர்களுக்கு மேற்படி மருந்துகளைப் பரிந்துரைக்காது தவிர்க்கவேண்டும் எனவும் பொதுமக்கள் காய்ச்சலுக்காகத் தாங்கள் பாவிக்கும் மருந்துகள் குறித்து தெரிந்துகொள்ளுமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.