தனிக்கட்சியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதில் உள்ள கடின தன்மையினை கடந்த கால அரசியல் குறித்து அவதானத்தில் கொள்ளும் போது அனைவராலும் உணரமுடியும். எனவே தான் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து வெற்றிப்பெற கூடிய வகையில் அதனை வலுப்படுத்தும் பணிகளில் முழு அளவில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த இலக்கிலிருந்து நானோ எனது பங்காளி கட்சிகளின் தலைவர்களோ விலக போவதில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான கூட்டணியுடன் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்வதே எமது ஒரே இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான கூட்டணியுடன் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்வதே எமது ஒரே இலக்காகும். அதன் பின்னர் பொதுத் தேர்தலிலும் வெற்றியடைந்து ஸ்தீரமான அரசாங்கத்தை ஸ்தாபித்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
2014 ஆம் ஆண்டு நாம் நாட்டுக்காக ஒன்றிணைந்தோம். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை பலப்படுத்தல் , வீழ்ச்சியடைந்திருந்த பொருளதாரத்தை மீள் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லாட்சியை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் , பல அமைப்புக்களுடன் இணைந்து கூட்டணியமைத்தோம்.
கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட ஆரோக்கியமான முன்னேற்றங்கள் குறித்து நாம் கவனம் செலுத்தினோம். அரசியலமைப்பு சூழ்ச்சியினால் நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மை குறித்தும் கவனம் செலுத்தினோம்.எனவே இந்த காரணிகளால் மேலும் பரந்துப்பட்ட கூட்டணியொன்றை மீண்டும் அமைப்பதற்கான தேவை உணரப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டை கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் ஆழமான பேச்சுவாரத்தைகளை முன்னெடுத்தோம். இதன் பிரகாரம் ‘ புதிய நாடு – நவீன சமூகம் ‘ என்ற இலக்கை நோக்கி ‘ ஜனநாயக தேசிய முன்னணி ‘ என்ற பெயரில் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து அதனை அரசியல் அமைப்பொன்றாக பதிவு செய்யவும் தீர்மானித்தோம். அனைத்து தரப்புகளுடனும் பேச்சுக்களை நடத்திய பின்னர் ஜனநாயக ரீதியில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆகஸ்ட்டுக்குள் கூட்டணி
இந்நிலையில் ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற இறுதி கலந்துரையாடலில் புதிய யோசனைகள் பல முன்வைக்கப்பட்டன. அந்த யோசனைகளை உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம். எனவே கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட கால அவகாசம் தேவை என்பதை கவனத்தில் கொண்டோம். எவ்வாறாயினும் ஆகஸ்ட் இறுதிக்குள் கூட்டணியை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளோம்.
ஜனநாயக தேசிய முன்னணி ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான தேவை அதிகமாகவே காணப்படுகின்றது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பங்காளி கட்சிகளின் அன்றாட அரசியல் செயற்பாடுகளுக்கு தடைகள் ஏற்படாது. கட்சிகளின் உள்ளக விடயங்களுக்கு தலையீடுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படாது.
கட்சிகளின் தனித்துவம் மற்றும் சுயாதீன தன்மைகள் பாதுகாக்கப்பட்ட வகையிலேயே கூட்டணி உருவாக்கப்படும். ஜனநாயக தேசிய முன்னணிக்காக கொள்கை திட்டத்தை உருவாக்குவோம். இதனை அடிப்படையாக கொண்டே எதிர்கால நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
தனிக்கட்சியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதில் உள்ள கடின தன்மையினை கடந்த கால அரசியல் குறித்து அவதானத்தில் கொள்ளும் போது அனைவராலும் உணர கூடிய விடயமாகும். எனவே தான் பரந்துப்பட்ட கூட்டணியை அமைத்து வெற்றிப்பெற கூடிய வகையில் அதனை வலுப்படுத்தும் பணிகளில் முழு அளவில் ஈடுப்பட்டேன். இந்த இலக்கிலிருந்து நானும் எனது பங்காளி கட்சிகளின் தலைவர்களும் விலக போவதில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான கூட்டணியுடன் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்வதே எமது ஒரே இலக்காகும். அதன் பின்னர் பொதுத் தேர்தலிலும் வெற்றியடைந்து ஸ்தீரமான அரசாங்கத்தை ஸ்தாபித்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வோம்.
இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம். உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.

