தாய்ப்பால் வங்கி மூலம் 3 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்!

256 0

எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கி மூலம் 3 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும், தாய்ப்பாலின் அவசியத்தை சமூகத்துக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும், குறைமாதம் மற்றும் எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கும், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சரி செய்யும் விதமாக தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த தாய்ப்பால் வங்கிகள், பச்சிளம் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் செயற்கை அன்னையாக விளங்குகின்றன. அந்த வகையில் தாய்ப்பாலை சேமிக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதல் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது.

மக்களிடம் இந்த தாய்ப்பால் வங்கிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இந்த திட்டம் பின்னர் எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை உள்பட தமிழகத்தில் உள்ள பிற 7 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் விரிவாக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 22 இடங்களில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க 352 பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் பல்வேறு தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து தாய்ப்பாலை தானமாக கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு (2018) ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 4 ஆயிரத்து 904 தாய்மார்கள், தாய்ப்பாலை தானமாக கொடுத்துள்ளனர். அதன்படி அவர்களிடம் இருந்து 470.61 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது.

இதில் 454.65 லிட்டர் தாய்ப்பால், தேவைப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 ஆயிரத்து 992 குழந்தைகள் தாய்ப்பால் பெற்று பயன் அடைந்துள்ளனர். தாய்ப்பால் வங்கி செயல்பாடு குறித்து எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை டாக்டர் மங்களபாரதி கூறியதாவது:-

தமிழகத்தில் தாய்ப்பால் வங்கி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் தற்போது இயங்கி வருகிறது. இந்த தாய்ப்பால் வங்கியில் அனைத்து தாய்மார்களும் தானம் செய்யலாம்.

இங்கு தானம் செய்யும் தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தாய்ப்பால் தானமாக கொடுக்க முடியும். அவ்வாறு தானம் செய்யப்படும் தாய்ப்பால் பதப்படுத்தப்படும். அவ்வாறு பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டு எச்.ஐ.வி., மஞ்சட்காமாலை உள்ளிட்ட நோய்கள் உள்ளதா? என ஆய்வு செய்யப்படும். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டு எந்த ஒரு ‘வைரஸ்’ பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே குழந்தைகளுக்கு கொடுக்கப்படும். இதன்மூலம் தானமாக பெறப்பட்ட தாய்ப்பால் மற்ற குழந்தையை சென்றடைய 4 முதல் 5 நாட்கள் ஆகும். இவ்வாறு தானமாக கொடுக்கப்படும் தாய்ப்பால் மூலம் எடை குறைவாக உள்ள குழந்தைகள் உள்ளிட்டோருக்கு மறுவாழ்வு கொடுக்க மிக உதவியாக இருக்கும்.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் வேலையை காரணம் காட்டி தங்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் இதை காரணம் காட்டி தாய்ப்பால் கொடுப்பதை தாய்மார்கள் தவிர்க்கக்கூடாது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள், தினமும் தாய்ப்பாலை ஒரு பாத்திரத்தில் பிடித்து வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு செல்லலாம்.

இவ்வாறு தாய்ப்பாலை மார்பகத்தில் இருந்து எடுத்து சேமித்து வைக்க பல்வேறு உபகரணங்கள் தற்போது விற்கப்படுகிறது. பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட அந்த தாய்ப்பாலை வீட்டில் உள்ளவர்கள் குழந்தைக்கு கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், அதை தானம் செய்வதன் அவசியம் குறித்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரும் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.