மிஹின் லங்கா ஊழியர்கள் நியாயத்தை கோரி நிற்கின்றனர்

305 0

mihin-lankaமிஹின் லங்கா நிறுவனத்தில் சேவையாற்றிவந்த ஊழியர்களில் 10 வீதமானோரே ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மஹின் லங்கா ஊழியர் சங்கத்தின் செயலாளர் பிமாலி குமாரநாயக்க குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மிஹின் லங்கா நிறுவனம் ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் இணைக்கப்படுகின்றமையினால், பெரும்பாலானோருக்கு தொழில்வாய்ப்பு இல்லாது போவதற்கான சாத்தியகூறுகள் தென்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மிஹின் லங்கா நட்டத்தில் இயங்குகின்றமை உண்மை என்ற போதிலும், அந்த நிறுவனத்தின் நட்டத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அதனை ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் இணைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்த நடவடிக்கையினால் ஊழியர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதன்படி, மிஹின் லங்கா நிறுவனத்தில் கடமையாற்றிய அனைத்து ஊழியர்களையும் ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் இணைத்துக் கொள்ளுமாறும், அவ்வாறு இல்லையென்றால், அவர்களுக்கு நட்டஈட்டை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தாம் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்திய போதிலும், இதுவரை தமக்கான உரிய தீர்வு கிடைக்கவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.