இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கான இலவச விசா நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது.
இந்தியா, சீனா உட்பட 48 நாடுகளுக்கான சுற்றுலா விசாவுக்கான கட்டணத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் மேற்கொண்டிருந்த தீர்மானம் இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது.
இதற்கு அமைவாக ஒரு மாத கால சுற்றுலாவுக்கான கட்டணம் அறவிடப்பட மாட்டாதென அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கான விசா அனுமதியினை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இணைத்தளத்தின் மூலம் விண்ணபிக்க முடியும். அத்துடன் விசா பெறுவதற்கும் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாமென தெரிவித்த அமைச்சர், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு ஒரு மாத காலத்துக்கு குறுகிய கால விசா வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த வேலைத்திட்டம் ஆறு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவத்தார். இந்தக் கால எல்லையை நீடிப்பது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆர்.எம்.பி.எஸ்.பி ரத்னாயக்க இது தொடர்பாக குறிப்பிடுகையில் இந்த விசா அனுமதியினை பெற்றுக் கொள்வதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இணையத்தளத்தின் ஊடாக விசாவை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கு பயண முகவர்கள் ஊக்குவிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிடுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னார் தற்போது நாட்டின் பாதுகாப்பு வழமைக்குத் திரும்பியுள்ளதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட சகல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதேவேளை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

