தோட்டத்தொழிலா ளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவுக்கான அனுமதியை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. பிரதமர் தலையிட்டு அதற்கு தேவையான நிதியை ஒதுக்கித்தருவதாக உறுதியளித் திருக்கின்றார் என சபை முதல்வரும் அமைச் சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தின் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன உரையாற்றுகையில்,
தோட்டத்தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவு விடயத்தில் அரசு அம்மக்களை ஏமாற்றியுள்ளது. அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து இதனை பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளது. அதனால் கடந்த அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து அமைச்சர் திகாம்பரம் வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.
இதற்கு சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளிக்கையில், தோட்டத்தொழிலாளர்களுக்கான 50ரூபா கொடுப்பனவாக வழங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. பிரதமர் தலையிட்டு இதற்கு தேவையான நிதியை ஒதுக்கித்தருவதாக தெரிவித்திருக்கின்றார். எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவிலிருந்த பிரச்சினை இதன் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது என்றார்.

