ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செயித் அலிஷாஹிர் மௌலானா தெரிவித்தார்.
முஸ்லிம் உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்ததன் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேசும்முகமாகவே, நாளை மாலை அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டமாவடியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இராஜினாமா செய்த அமைச்சர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மீண்டும் அழைத்துள்ள நிலையில் தாங்கள் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக எந்த தீர்மானங்களும் இதுவரை எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை துறக்கும் போது முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.
இதில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லை பிரச்சினை, தோப்பூர் உள்ளுராட்சி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் பிரதமருடன் பேசவுள்ளோம் என்று அவர் கூறினார்.

