சிங்கள பௌத்த வாக்குகளினால் மாத்திரம் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் வாக்குகளில் குறிப்பிடத்தக்களவு வாக்குகளை பெறுவதற்கான ஒரு முறைமை ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது தேர்தலை வெற்றி கொள்ள முடியாது. இதனை நாம் மிகவும் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு கட்சிக்கு ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் 75 வீதமான வாக்குகள் கிடைக்கப் பெற்று, சிங்கள பௌத்த வாக்குகளில் மட்டும் ஜனாதிபதியைத் தெரிவு செய்து கொள்ள வேண்டுமானால் 72.8 வீத வாக்குகள் கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். இதனை ஒரு போதும் இந்த நாட்டில் செய்ய முடியாது.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவருக்கு 60 வீதத்துக்கு மேல் தனி சிங்கள வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை. 60 தசம் கணக்கிலேயே இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் 59 வீதமான சிங்கள வாக்குகளே ஜனாதிபதிக்கு கிடைத்தன. 63 வீதத்தை தனிச் சிங்கள வாக்குகளினால் தாண்டிச் செல்வது என்பது வேடிக்கையானது.
இதனால், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் குறிப்பிடத்தக்களவு வாக்குகள் ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைக்கப் பெறுதல் வேண்டும். இது கட்டாயமானது.
அதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணையாமல் ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

