பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு குறைக்க விழிப்புணர்வு பிரசாரம்

248 0

மத்திய அரசு உத்தரவுப்படி, பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை, வேளாண் துறையினர் துவக்கியுள்ளனர்.தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், பூச்சிகளை கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரிக்க, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், உற்பத்தியாகும் உணவு பொருட்களில், ரசாயன தன்மை ஏற்படுகிறது.

மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகள், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை அழிப்பதால், மண்ணின் வளமும் பாதிப்படைகிறது.எனவே, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை, நாடு முழுவதும் குறைக்க, மாநில வேளாண் துறையினருக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, விரைவில் துவங்க உள்ள சாகுபடி பருவத்தில், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டை குறைப்பது தொடர்பாக, விவசாயிகளுக்கு, வேளாண் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு, பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்து, நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் இரை விழுங்கிகள், விளக்குபொறி உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயன்படுத்தலாம்.
இது குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லாததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன; விவசாயிகள் இறந்த சம்பவமும் நடந்துள்ளது.வரும் சாகுபடி காலங்களில், பூச்சி மருந்துகளின் பயன்பாட்டை குறைப்பதற்கு, விவசாயிகளுக்கு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் இறுதி வரை, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.