இலங்கையில் ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் 6.6 ஆண்டுகளால் அதிகம்!

454 0

1320889729_0413002611இலங்கையில் ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் 6.6ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக இலங்கை புள்ளவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட புள்ளிவிபரவியல் திணைக்களப் பணிப்பாளர் இந்து பண்டார,

இலங்கையில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 78.6 ஆண்டுகளாக இருக்கும் அதேவேளை ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 72 ஆண்டுகளாக இருப்பது அண்மைய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1962-64 காலப்பகுதி வரையில் சிறிலங்காவில் பெண்களின் சராசரி ஆயுள்காலம் ஆண்களை விடக் குறைவாகவே இருந்தது.

அம்பாறை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பெண்களின் சராசரி ஆயுள்காலம் 81.1 ஆண்டுகளாக உள்ளது. அதையடுத்து மாத்தறையில் 80.2 ஆண்டுகளாகவும், காலி மற்றும் கம்பகாவில் 79.9 ஆண்டுகளாகவும் பெண்களின் சராசரி ஆயுள்காலம் உள்ளது.

அதேவேளை, அம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 74.2 ஆண்டுகளாக உள்ளது. அதையடுத்து, மாத்தறையில் 73.9 ஆண்டுகள், இரத்தினபுரி மற்றும் மொனராகலவில் 73.7 ஆண்டுகளாக ஆண்களின் சராசரி ஆயுள் காலம் உள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களின் ஆகக்குறைந்த ஆயுள்காலம் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. இங்கு ஆண்களின் ஆயுள் காலம் 60.9 ஆண்டுகளாகவும், பெண்களின் சராசரி ஆயுள்காலம் 72.9 ஆண்டுகளாகவும் உள்ளன.

ஆண்களின் இரண்டாவது குறைவான சராசரி ஆயுள்காலம், கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இங்கு ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 64.5 ஆண்டுகளாகும்.

அதையடுத்து, மட்டக்களப்பில் 66.8 ஆண்டுகளும், வவுனியாவில் 67.8 ஆண்டுகளும், ஆண்களின் சராசரி ஆயுள்காலமாக உள்ளது.

சிறிலங்காவின் ஆண்களை விடவும் பெண்கள் அதிக காலம் உயிர்வாழ்கின்றனர். இதற்கு சில உயிரியல் மற்றும் புவியியல் காரணிகளும் காரணமாக உள்ளன.

எனினும், ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிலங்காவின் சராசரி ஆயுள் காலம் திருப்திகரமானதாகவே உள்ளது.

ஜப்பானியர்கள் சராசரியாக 84.8 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றனர். அதையடுத்து, சிங்கப்பூரில் 84.7 ஆண்டுகளும், சுவிற்சர்லாந்தில் 82.5 ஆண்டுகளும், அமெரிக்காவில் 79.7 ஆண்டுகளும், டென்மார்க்கில் 79.2 ஆண்டுகளும், சிறிலங்காவில் 76.5 ஆண்டுகளும், மாலைதீவில் 75.3 ஆண்டுகளும், இந்தியாவில் 68.1 ஆண்டுகளும், கென்யாவில் 63.7 ஆண்டுகளும், சூடானில் 63.7 ஆண்டுகளும், உகண்டாவில் 54.9 ஆண்டுகளும், ஆப்கானிஸ்தானில் 50.8 ஆண்டுகளும் சராசரி ஆயுள்காலம் இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.