தாயகம் திரும்ப விரும்பிய 2500 அகதிகளையும் சிறீலங்கா விரும்பினால் அழைத்துச் செல்லலாம்!

324 0

vikas-swarupசிறீலங்கா அரசாங்கம் விரும்பினால் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்த 2500 அகதிகளையும் தமது நாட்டுக்கு அழைத்துச் செல்லலாம், இதனால் இந்தியாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையென இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவிலிருந்து 2500 அதிகள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டு மன்னாரிலும் காங்கேசன்துறையிலும் இறக்கப்படுவார்கள் எனவும், கப்பலுக்காகவே அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியபோது, அகதிகள் தமது தாயகம் திரும்புவதால் இந்தியாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையென விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

“கொழும்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவரராஜுக்கும் சந்திரகாசனுக்கும் இடையில் நடந்த சந்திப்பில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.

அந்தச் சந்திப்பின் போது, அகதிகளாக இருக்கும் மக்கள் சுயவிருப்பின் பேரிலேயே தாயகம் திரும்ப வேண்டும் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

சுயமாக முடிவெடுத்து, சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நாடு திரும்ப இந்த மக்கள் விரும்பினால், நாம் ஏன் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இருப்பினும், சில மாதங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிற்கும் சந்திரகாசனுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அகதிகள் விரும்பினால் தாயகம் திரும்பலாம் எனவும், அதற்கு இந்தியா கப்பல் ஒழுங்கு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.