மிஹின் லங்கா விமான சேவைகள் நிறுவனத்தை மூடுவதற்குஅருந்திக பெர்ணான்டோ எதிர்ப்பு

344 0

arunthtikka-fernandoமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் மீள ஆரம்பிக்கப்பட்ட மிஹின் லங்கா விமான சேவைகள் நிறுவனத்தை மூடுவதற்கு மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ போர்கொடி உயர்த்தியுள்ளார்.

விமான சேவைகள் துறையில் எவ்விதத்திலும் தொடர்புபடாத சிலரது யோசனைகளை ஜனாதிபதியும், பிரதமரும் நம்பி இந்தப் பிழையான தீர்மானத்தை எடுத்திருப்பதாகத் தெரிவித்த அவர், விரைவில் இதுகுறித்து அவ்விருவரையும் சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

மிஹின் லங்கா விமான சேவைகள் நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ, அரசாங்கம் எடுத்திருக்கும் இந்தத் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன்.

இந்த நாட்டில் உள்ள இரண்டு சர்வதேச விமான நிலையங்களும் தொடர்ந்தும் பாதுகாப்பாக பேணப்பட வேண்டும். அவை இரண்டுமே எங்களுக்கு அவசியமானதாகும். குறிப்பாக மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நெல்களஞ்சியப்படுத்த புதிய அரசாங்கம் எடுத்த முடிவை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். அந்த விமான நிலையம் மூடப்படக்கூடாது. விமான நிலையத்திற்கான விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் அவசியமாகும்.

அதனை புதிய விமானிகளின் பயிற்சி, சர்வதேச விமான நிறுவனங்களின் பயிற்சி மற்றும் அவை சம்பந்தப்பட்ட பயிற்சிகளுக்காவது பயன்படுத்த வேண்டும். அதேபோன்று மிஹின் லங்கா விமான சேவைகள் நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் நான் எதிர்ப்பு வெளியிடுகின்றேன். அந்த நிறுவனம் இலாபத்திலேயே இயங்கிக்கொண்டிருந்தது.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் நட்டத்தை ஈடுசெய்வதற்காக மிஹின் லங்காவை மூடுவதற்கு அரசாங்கத்திற்கு சிலர் பரிந்துரைத்திருக்கின்ற படியினால் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

பிரதமர், ஜனாதிபதி மீது பிழை இல்லை. ஆனால் சிறிதளவேனும் விமான சேவைகள் துறையில் சம்பந்தப்படாதவர்களால் முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகள் முழுமையாக பிழை என்பதே எனது கருத்தாகும். எனவே மிஹின் லங்காவை மூடுவதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் விரைவில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன்.
என்று மேலும் தெரிவித்துள்ளார்.