வடக்கு முதலமைச்சருக்கு தனது பதவியைப் பயன்படுத்தத் தெரியாது-விஜித் விஜிதமுனி சொய்ஸா

351 0

maxresdefaultவடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு முதலமைச்சர் பதவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக கற்றுக்கொடுப்பதற்கு தாம் தாயராக இருப்பதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சில்லறைத்தனமாக கருத்துக்களுக்கு பதிலளிப்பதற்கு தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கில் 1 இலட்சத்து 50ஆயிரம் இராணுவத்தினர் இருப்பதாகவும், இந்நிலைமையானது வடக்கில் வன்முறைகளுக்கு அடித்தளமிடுவதாகவும் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பாக கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டபோதே அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா,
‘வடமாகாண முதலமைச்சர் அல்லது வேறு மாகாண முதலமைச்சர்கள் விடுக்கின்ற அறிவிப்புக்களை விடவும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கின்ற தீர்மானம் முக்கியமாகும். எனவே இவ்வாறான சில்லறை அறிவிப்புக்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பதிலளிக்காது. அவருக்கு அரசியலொன்று இருக்கின்றது. ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் அரசியல் பாதையொன்று இருக்கின்றது.

அதேபோன்று அரசாங்கத்திற்கும் அரசியல் பாதையொன்று இருக்கின்றது. அவரவர் தத்தமது அரசியலை செய்கின்றனர். அரசியலில் ஈடுபடும்போது மக்களின் மனங்களை அரசியல் நடவடிக்கைகளில் மட்டுமல்ல, உண்மையான சமூக சேவையின் ஊடாகவே மகிழ்விக்க முடியும். எனினும் எமது நாட்டில் இவை இடம்பெறாதுள்ளதை இட்டு நான் கவலையடைகின்றேன். நான் தனிப்பட்ட முறையில் விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தவுள்ளேன்.

நானும் முன்னர் முதலமைச்சராக பதவிவகித்திருந்தேன். யுத்தகாலத்தில் 5000 ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கியிருந்தேன். நான் ஸ்ரீலங்காவில் முதற்தடவையாக டிப்ளோமா மற்றும் பயிற்சிகளை நிறைவுசெய்தவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கியிருந்தேன்.

எனவே பதவியை வகித்துக்கொண்டு எவ்வாறு வேலை செய்வது என்பது தொடர்பாக வடக்கு முதலமைச்சர் என்னிடம் கேட்பாராயின் நான் அவருக்கு கற்றுக்கொடுக்கத் தயார். அதிகாரங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவது தொடர்பாக முறையொன்று காணப்படுகிறது. நான் இந்த நியனங்களை அலரிமாளிகையில் வைத்து வழங்கவில்லை’ என்று மேலும் குறிப்பிட்டார்.