ரூ.60 லட்சம் கேட்டு டாக்டர் மகள் கடத்தல்: வேலைக்கார பெண்- காதலன் சிக்கியது எப்படி?

381 0

சென்னை அமைந்தகரையில் ரூ.60 லட்சம் கேட்டு டாக்டர் மகளை கடத்திய வேலைக்கார பெண் மற்றும் அவரது காதலன் ஆகியோர் போலீசாரிடம் சிக்கியது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்…

அமைந்தகரை செனாய்நகர் செல்லம்மாள் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ். சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடைய மனைவி நந்தினி. டாக்டரான இவர் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது 3½ வயது மகள் அன்விகா. முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார்.

இவர்களது வீட்டில் திருச்சியை சேர்ந்த அம்பிகா என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அம்பிகாவும் சிறுமி அன்விகாவும் திடீரென மாயமானார்கள். சிறிது நேரத்தில் டாக்டர் நந்தினியின் செல்போனுக்கு வேலைக்கார பெண் அம்பிகா பேசினார்.

அப்போது ‘என்னையும் அன்விகாவையும் யாரோ கடத்தி சென்றுவிட்டனர். நாங்கள் எங்கு இருக்கிறோம் என்று தெரியவில்லை எங்களை காப்பாற்றுங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதன்பின்னர் மீண்டும் தொடர்புகொண்ட மர்ம நபர் ‘உங்கள் மகள், வேலைக்காரப் பெண்ணையும் உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ. 60 லட்சம் கொடுக்க வேண்டும்’ என்று மிரட்டல் விடுத்து போனை துண்டித்தார்.

இதனால் பயந்து போன அருள்ராஜூம் நந்தினியும் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் செல்போன் அழைப்பு வந்த நம்பரின் சிக்னலை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில் கோவளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் இருந்து பேசப்படுவது தெரிந்தது. இதையடுத்து கோவளம் விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி அன்விகாவை மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட வேலைக்கார பெண் அம்பிகாவை கைது செய்தனர்.

இதில் அவருக்கு உதவியாக இருந்த அவரது காதலன் கலிமுல்லாவும் சிக்கினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த கடத்தலில் அவர்களுக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகள் 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேமரா

சிறுமி அன்விகா கடத்தப்பட்ட புகார் கிடைத்ததும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு காரில் எந்தவித பதட்டமும் இல்லாமல் வேலைக்காரப் பெண் அம்பிகா ஏறிச்செல்வது பதிவாகி இருந்தது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து முதலில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அப்போது அவர் கோவளத்தில் சிறுமியுடன் இருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் அவரது காதலன் கலிமுல்லாவும் தனியாக அருள்ராஜிடம் போன் செய்து பணம் கேட்டு மிரட்டலில் ஈடுபட்டு வந்தார். அந்த செல்போன் எண் சிக்னலை வைத்து செங்குன்றம் பாலவாயிலில் பதுங்கி இருந்த கலிமுல்லாவையும் போலீசார் பிடித்தனர்.

கைதான கலிமுல்லா புழலில் உள்ள பிரபல வெளிநாட்டு கறிக்கோழி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வேலைக்கார பெண் அம்பிகாவின் காதலனான அவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறுமியை கடத்தி சிக்கிக்கொண்டனர்.

அம்பிகா வேலைக்காக டாக்டர் நந்தினி வீட்டில் சேர்ந்ததும் அவர்கள் வசதி படைத்தவர்கள் என்பதை அறிந்துக்கொண்டார். குழந்தைமேல் அவர்கள் பாசமாக இருப்பதையும் தெரிந்து கொண்ட அவர் குழந்தையைக் கடத்தினால் பெரிய தொகையை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று காதலன் கலிமுல்லாவிடம் கூறியுள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து குழந்தை கடத்தலை அரங்கேற்றியுள்ளனர்.

இதில் சந்தேகம் வராமலிருக்க அம்பிகா தன்னையும் மர்ம கும்பல் கடத்தியதாக நாடகமாடி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.